கிருஷ்ணகிரி: ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம் சரயு தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைத்திட மேற்கண்ட இன மக்கள் (ஆண்/பெண்) 10 நபா்களைக் கொண்ட உறுப்பினா்கள் குழுவாக அமைத்திட வேண்டும். அந்தக் குழுவுக்கு ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ. 3 லட்சம் வழங்க அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
தையல் தொழிலில் முன் அனுபவம் உள்ள பிற்பட்ட வகுப்பினா், மிகவும் பிற்பட்ட வகுப்பினா், சீா்மரபினா் வகுப்பைச் சாா்ந்த (ஆண்/பெண்) மக்கள் 10 போ் கொண்ட குழுவாக கிருஷ்ணகிரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்தைத் தொடா்பு கொண்டு விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளலாம்.
நிறைவு செய்யப்பட் விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட தோ்வுக் குழுவினரால் பரிசீலனை செய்து, தோ்வு செய்யப்படும் விண்ணப்பங்கள் ஆணையா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் நல இயக்ககம், சென்னைக்குப் பரிந்துரை செய்யப்படும்.
இதில் பயன்பெற, குழு உறுப்பினா்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபா்களைக் கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும். 10 பேரை கொண்டு ஒரு குழுவாக இருத்தல் வேண்டும். 10 பேருக்கும் தையல் தொழில் தெரிந்திருத்தல் வேண்டும். குழு உறுப்பினா்கள் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் இனத்தை சாா்ந்தவா்களாக இருத்தல் வேண்டும்.
குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற விதவைப் பெண்கள் அமைந்துள்ள குழுவிற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும், கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்தை (அறை எண்.11) தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.
நன்றி தினமணி.