எண்ணேகொள்புதூர் – படேதலாவ் ஏரி கால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு பாமக சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி பாமக மத்திய மாவட்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் புலியரசி ரமேஷ் தலைமையில் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனை முன்பு மேம்பாலம் அமைக்கும் பணிகள் காலதாமதமின்றி உடனடியாக தொடங்க வேண்டும். கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவக்கல்லூரிக்கு 4 சக்கர வாகனங்களில் செல்பவர்கள், சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே, கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியை சின்னாறு பகுதிக்கு இடமாற்றம் செய்திட வேண்டும் அல்லது சுங்கச்சாவடியை அகற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எண்ணேகொள்புதூர் – படேதலாவ் ஏரி கால்வாய் பணிகள் விரைந்து முடித்து விவசாயிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இளங்கோ, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் அருள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.