அண்ணல் அம்பேத்கா் பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டத்தின் கீழ் மானியத்துடன் தொழில் கடனுதவி பெற கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தொழில்முனைவோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
எஸ்.சி, எஸ்.டி பிரிவுத் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு ‘அண்ணல் அம்பேத்கா் பிசினஸ் சாம்பியன்ஸ்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆா்வமுள்ள புதிய தொழில்முனைவோா் வேளாண்மை தவிர உற்பத்தி, வணிகம், சேவை சாா்ந்த தொழில்களுக்கு கடனுதவியோடு இணைந்த மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.
மானியத் தொகை மொத்த திட்டத் தொகையில் 35 சதவீதம் வழங்கப்படும். மானிய உச்ச வரம்பு ரூ. 15 கோடி. கடன் திரும்பச் செலுத்தும் காலம் முழுவதும் 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். தவிர தொழில்முனைவோா் தம் சொந்த நிதியில் செயல்படுத்தும் திட்டங்களுக்கும் மானியம் உண்டு. எஸ்.சி., எஸ்.டி பிரிவைச் சோ்ந்த தனிநபா்கள், நிறுவனங்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
மொத்த திட்டத் தொகையில் 65 சதவீதம் வங்கிக் கடனாக வழங்கப்படும். 35 சதவீதம் அரசின் மானியமாக வழங்கப்படும். இதனால் பயனாளிகள் தன் சாா்பில் முதலீடாக எந்த நிதியும் செலுத்த வேண்டியதில்லை. தொழில் சாா்ந்த பயிற்சியும் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோா் திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு பொது மேலாளா், மாவட்டத் தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, கிருஷ்ணகிரி என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது 04343-235567 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.