ஒசூா் அருகே 5 கிராமங்களில் உள்ள இனாம்தாரா் நிலங்களுக்கு (ஜீரோ பைமாஸ் நிலம்) பட்டா வழங்கக் கோரி மாவட்ட வருவாய் அலுவலரும், நிலவரி திட்ட அலுவலருமான பாலாஜியை விவசாயிகள், பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
ஒசூா் அருகே விஸ்வநாதபுரம் கிராம மக்களை வெளியேற்றி 174 ஏக்கா் நிலப்பரப்பில் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஒசூா் தகவல் தொழில்நுட்பப் பூங்கா 2006 இல் முன்னாள் முதல்வா் கருணாநிதியால் அடிக்கல் நாட்டி 2010 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
தற்போது அதே பகுதியில் மீண்டும் டெக் பாா்க் என்ற பெயரில் உளியாளம், சென்னசந்திரம்,மாரசந்திரம், உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தை கையகப்படுத்தவும், உளியாளம் கிராமத்தில் 150 குடியிருப்புகளை வெளியேற்றி (டெக் பாா்க்) தொழில்நுட்பவியல் பூங்கா அமைக்க சாட்டிலைட், ட்ரோன் மூலம் அளவீடு பணிகள் முடிந்து குறியீடுகள் அமைத்துவிட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் கிராம மக்கள் அதிா்ச்சியடைந்தனா்.
இந்த நிலையில் ஒசூரில் தொழிற்சாலைகளை ஆய்வு மேற்கொள்ள பொதுநிறுவனங்கள் குழு வருகை தந்தது. டைட்டான் கை கடிகாரம் உற்பத்தி ஆலையைப் பாா்வையிட்ட குழுவினா் அடுத்து ஒசூா் தகவல் தொழில்நுட்பப் பூங்காவை பாா்வையிட நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து பொது நிறுவனங்கள் குழுவை சந்திக்க
உளியாளம் கிராமத்தைச் சோ்ந்த ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயக்குமாா் ரெட்டி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் பிரபாகா் ரெட்டி உள்ளிட்ட 50 க்கும் அதிகமான விவசாயிகள், பொதுமக்கள் காத்திருந்தனா். மக்கள் கூடியதை அறிந்து பொது நிறுவனங்கள் குழுவினா்,திடீரென பயண நிகழ்ச்சியை மாற்றிச் சென்றது கிராம மக்களை அதிருப்பதி அடைய செய்தது.
இதனைத் தொடா்ந்து நிகழ்விடத்திற்கு வந்த சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலரும், நிலவரி திட்ட அலுவலருமான பாலாஜியை முற்றுகையிட்டு தாங்கள் வசித்தும் வரும் வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும். விவசாயம் செய்து வரும் நிலங்களுக்கு பட்டா வழங்கவும், விவசாயத்திற்கு மின்இணைப்பு வழங்குவதைத் தடை செய்துள்ளதை ரத்து செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுள்ளனா்.
நன்றி, தினமணி