தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைமை நிர்வாகிகள் அவசரக் கூட்டம் அம்பத்தூரில் உள்ள கூட்டமைப்பின் நிர்வாக அலுவலகத்தில் கடந்த 16ம் தேதி தலைவர் கரூர் மாரப்பன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் மத்திய அரசு கடந்த 11ம் தேதியன்று பாராளுமன்றத்தில், நூற்றாண்டுக்கு மேலாக நடைமுறையில் உள்ள இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகிய மூன்று சட்டங்களின் சரத்துகளை முழுமையாக மாற்றி அமைத்து, மொழி சுதந்திரம் உள்ள இந்தியாவில் மேற்படி வழக்கத்தில் உள்ள இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்டங்களை முறையே இந்தியில் பாரதிய நியாய ஷன்ஹிதா 2023, பாரதிய நஹ்ரிக் சுரக்ஷா 2023, பாரதிய சக்ஷய அதிநயம் சட்டம் 2003 என மாற்றியமைத்துள்ளது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் சரத்து 348-ற்கு எதிரான கொடுங்கோல் சட்டமாகும். மேற்படி கொடுங்கோல் சட்டங்களை தாக்கல் செய்துள்ள மத்திய அரசை தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு வன்மையாக கண்டித்து, உடனடியாக பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேற்படி மூன்று கொடுங்கோல் சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி வரும் 21ம் தேதி (நேற்று) முதல் வருகிற 31ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் காலை 10.30 மணி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்களின் வளாகத்தின் முன்பு (நீதிமன்ற புறக்கணிப்பை முழுமையாக தவிர்த்து) “கண்டன முழக்க ஆர்ப்பாட்டம்” நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரில், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் துணைத் தலைவர் கருணாகரன் வழிகாட்டுதல் படி நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கோவிந்தராஜீலு, செயலாளர் சத்தியநாராயணன், துணைத் தலைவர் ராமச்சந்திரன், சுரேகா மற்றும் இணைசெயலாளர் மணிகன்டன் நூலகர் கலையரசன் ஆகியோர் தலைமையில் மத்திய அரசின் இந்தி திணிப்பு சட்ட மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
![](https://www.hellokrishnagiri.in/wp-content/uploads/2023/08/WhatsApp-Image-2023-08-04-at-12.43.12-720x620.jpeg)