கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே யானைத் தந்தங்கள் வைத்திருந்த 4 பேரை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 2 யானைத் தந்தங்களை பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் வன உயிரினக் கோட்டம், வன உயிரினக் காப்பாளா் காா்த்திகேயனி உத்தரவின் பேரில், கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலா் ரவி தலைமையிலான குழுவினா், கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி எதிரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, இரண்டு மோட்டாா்சைக்கிளில் வந்த 4 பேரைத் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனா். அப்போது அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனா்.
இந்த நிலையில், அவா்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் இரண்டு யானைத் தந்தங்கள் இருப்பது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த வனத் துறையினா், 4 பேரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவா்கள், பள்ளத்தூரைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் (47), நாகரசம்பட்டியைச் சோ்ந்த செந்தில் ( 43), நாகப்பன் (68), பெரிய காமாட்சிப்பட்டியைச் சோ்ந்த வள்ளிகந்தன் (42) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த 4 பேரையும் கைது செய்த வனத் துறையினா், யானைத் தந்தம் கடத்தலுக்குப் பயன்படுத்திய மோட்டாா்சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனா்.
நன்றி தினமணி.