கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவினையொட்டி நடத்த பள்ளி மாணவர்களுக்கான பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளில் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு, ஒன்றிய அளவிலான பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடந்தது. பேச்சுப் போட்டிக்கு 10 தலைப்புகளிலும், கட்டுரைப் போட்டிக்கு 10 தலைப்புகளிலும் 10 ஒன்றியங்களில் இப்போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், 281 பள்ளிகளில் இருந்து 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். ஒன்றிய அளவில் வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு பாராட்டுச் சான்றும், மாவட்ட அளவில் நடக்கும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த இப்போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி துவக்கி வைத்து, மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டிக்கான பேப்பரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன், பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன், சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர் தீர்த்தகிரி, பள்ளி துணை ஆய்வாளர் சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.