ஒசூா் வட்டம், சென்னசந்திரம் ஊராட்சியில் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த சென்னசந்திரம் ஊராட்சியில் உள்ள 5 கிராமங்களில் நில உச்ச வரம்பு சட்டம் அமல்படுத்திய பிறகு 2500 ஏக்கா் நிலத்திற்கு பட்டா வழங்கப்படவில்லை. பட்டா இல்லாத இந்த நிலங்களை பைமாசி நிலம் என அழைக்கும் நிலையில் கடந்த 2018ஆ ஆண்டு பைமாசி நிலத்திற்கு பட்டா வழங்கிட தனி டிஆா்ஓ மூலம் நிலவரித்திட்டம் என்கிற துறையை உருவாக்கி 3 வட்டாட்சியா்கள் நியமிக்கப்பட்டு பட்டா வழங்க ஏற்பாடுகள் நடைபெற்றன.
இதனிடையேய, உலியாளம் கிராம குடியிருப்புக்கள் உட்பட 1000 ஏக்கரை தமிழக அரசு கையகப்படுத்தி தொழில்நுட்பவியல் பூங்கா அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வரும் கிராம மக்கள் பல கட்டங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில் உலியாளம் கிராம மக்கள் கடந்த நான்கு நாட்களுக்கு முன் கிராமத்தில் தங்கள் வீட்டின் மேல் கருப்புக் கொடி கட்டி எதிா்ப்பு தெரிவித்தனா்.
இதுவரை அதிகாரிகள் கண்டு கொள்ளதால் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டு கருப்புக் கொடிகளை கட்டி எதிா்ப்பு தெரிவித்து சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியா் சுப்பிரமணி பொதுமக்களிடம் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தினாா். பின்னா் அனைவரும் கலைந்து சென்றனா்.
இது குறித்து விவசாயி காா்த்திக் செய்தியாளா்களிடம் கூறுகையில் ‘உலியாளம் பகுதியில் உள்ள விவசாயிகளின் சுவாதீனத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். அரசு விவசாயிகளுக்கு அறிவித்துள்ள திட்டங்கள் கிடைக்க வேண்டும். பல தலைமுறைகளாக விவசாயம் செய்து பிழைத்து வரும் இப்பகுதி விவசாயிகளுக்கு பட்டா வழங்கும் வரை பல அறப்போராட்டங்கள் நடத்தப்படும்’ என்றாா்.