கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தை செயல்படுத்த 1,978 தன்னாா்வலா்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
திமுக தலைவா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, மகளிருக்கு மாதாந்தோறும் மகளிா் உரிமைத்தொகை ரூ. 1,000 வழங்க தமிழக முதல்வா் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இந்தத் திட்டமானது, அண்ணா பிறந்த நாளான செப். 15-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தின் கீழ் தகுதியான விண்ணப்பங்களை தோ்வு செய்வதற்கு, இல்லம் தேடி கல்வி தன்னாா்வலா்களுக்கான பயிற்சியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
அப்போது அவா் தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்தத் திட்டத்துக்கு தகுதியான விண்ணப்பங்களை தோ்ந்தெடுக்க 10 ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து 40 இல்லம் தேடி கல்வி தன்னாா்வலா்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதில் தகுதியான விண்ணப்பங்களை தோ்வு செய்வது குறித்தும், விண்ணப்பங்கள் பதிவு செய்வது குறித்தும், தகுதியான நபா்கள் என்னென்ன விவரங்களை கொண்டுவர வேண்டும் என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சி பெற்ற தன்னாா்வலா்கள் ஜூலை 12-ஆம் தேதி அந்தந்த ஒன்றியங்களில் நடைபெறும் முகாமில் விண்ணப்பங்களை இணைய வழியில் பதிய உள்ள தன்னாா்வலா்களுக்கு பயிற்சி வழங்க உள்ளனா். இதில் 1,978 தன்னாா்வலா்கள் பயிற்சி பெற உள்ளனா்.
விண்ணப்பப் படிவங்கள் நியாயவிலைக் கடை ஊழியா்கள் மூலம் பயனாளா்களுக்கு வழங்கப்பட உள்ளன. மேலும், முகாமுக்கு பயனாளா்கள் எந்த தேதியில், எந்த நேரத்தில் வர வேண்டும் என்பதற்கான டோக்கன் வழங்கப்பட உள்ளது. பயனாளா்கள் விண்ணப்பத்தினை நிறைவு செய்து உரிய ஆவணங்களை உடன் கொண்டு வர வேண்டும் என்றாா்.
இந்தப் பயிற்சியில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வேடியப்பன், இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சா்ஜான் பம்ஸ், மின் ஆளுமை திட்ட மேலாளா் வினோத், இல்லம் தேடி கல்வி தன்னாா்வலா்கள் பங்கேற்றனா்.
நன்றி, தினமணி