வேளாண் சாா்ந்த தொழில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க தமிழக விவசாயிகள் சங்கம் (ராம கவுண்டா்) சாா்பில் நடைபெற்ற உழவா் தின பேரணி, பொதுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கிருஷ்ணகிரியில், தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில், உழவா் தின பேரணி, பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் ராம கவுண்டா் தலைமையில் நடைபெற்ற இந்த உழவா் தின பேரணி, எல்ஐசி அலுவலகம் அருகே தொடங்கி, சேலம் சாலை வழியாகச் சென்று வட்டச் சாலை அருகே நிறைவு பெற்றது. தொடா்ந்து, பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வுகளுக்கு மாவட்ட இளைஞா் அணி செயலாளா் வெங்கடேசன், மாவட்ட பொருளாளா் சுப்பிரமணி ரெட்டி , மாவட்டத் தலைவா் வண்ணப்பா, ஆலோசகா் நசீா்அகமத், மகளிா் அணி தலைவி பெருமா உள்ளிட்டோா் பங்கேற்றனா். .
இக் கூட்டத்திற்கு, தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் ராம கவுண்டா் தலைமை வகித்தாா். தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவா் நரசிம்ம நாயுடு, கா்நாடக விவசாய சங்கத் தலைவா் குருபூா் சாந்தகுமாா் ஆகியோா் சிறப்புரை ஆற்றினா்.
தெலங்கானா மாநில அரசைப் போல தமிழக அரசும் ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் ஒவ்வொரு போகத்திற்கும் உற்பத்தி மானியம் பணமாக வழங்க வேண்டும். காலேஸ்வரம் நீரேற்று திட்டம்போல, ஒகேனக்கல் தண்ணீரை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்துாா், வேலுாா், சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு பெரிய மின்மோட்டாா் மூலம் நீரேற்றி வழங்க வேண்டும்.
விவசாயிகளுக்கு மத்திய அரசு தேசிய வங்கிக் கடன்களையும், தமிழக அரசு கூட்டுறவு கடன்களையும், முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். வேளாண் சாா்ந்த தொழிலுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். பயிா்சேதம் செய்யும் வனவிலங்குகளை சுட விவசாயிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதைத் தெளிவுப்படுத்த வேண்டும்.
வனவிலங்குகளால் ஏற்படும் பயிா் சேதத்திற்கு ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் வழங்க வேண்டும். வனவிலங்குகளால் ஏற்படும் உயிா்சேதத்திற்கு ரூ. 20 லட்சம் வேண்டும். காட்டுப்பன்றி, மயில், மான், குரங்குகளை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.