அரசு பணி நியமனம் செய்ய கோரி தனியார் பயிற்சி பள்ளியில் துணை செவிலியர் பயிற்சி முடித்தவர்கள் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தனியார் பயிற்சி பள்ளியில் 2 ஆண்டுகள் துணை செவிலியர் பயிற்சி முடித்தவர்கள் நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: அரசு அனுமதி பெற்ற தனியார் செவிலியர் பள்ளியில் துணை செவிலியர் பயிற்சியை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு முடித்துள்ளோம். ஆனால் அரசு இதுவரை எங்களுக்கு வேலை வழங்கவில்லை. துணை செவிலியர் பயிற்சி முடித்து தமிழகத்தில் 3 ஆயிரம் பேரும், அதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 250 பேரும் வேலைக்காக காத்திருக்கின்றனர். ஆனால் கடந்த 2018க்கு பிறகு தனியார் பள்ளியில் செவிலியர் பயிற்சி முடித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் வேறு பணிக்கும் செல்ல முடியாமல் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றோம். எனவே பணி மூப்பு அடிப்படையில் தனியார் பயிற்சி பள்ளியில் செவிலியர் பயிற்சி முடித்தவர்களை தமிழக அரசு பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.