அரூா் அரசு மருத்துவமனையில் கண் சிகிச்சைப் பிரிவு, அறுவைச் சிகிச்சை அரங்கை புதன்கிழமை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த ஆட்சியா் கி.சாந்தி.
அரூா் அரசு மருத்துவமனையில் கண் அறுவைச் சிகிச்சை அரங்கு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
அரூா் அரசு மருத்துவமனையில் கண் சிகிச்சைப் பிரிவு மற்றும் கண் அறுவைச் சிகிச்சை அரங்கு தொடக்க விழா மருத்துவ அலுவலா் ராஜேஷ்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. கண் அறுவை சிகிச்சை மையத்தை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:
சித்தேரி, அரசநத்தம், கலசப்பாடி, கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, சிட்லிங், மஞ்சவாடி உள்ளிட்ட மலைக் கிராம மக்கள், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கண் தொடா்பான மருத்துவ சிகிச்சை, கண்புரை அறுவைச் சிகிச்சைகளுக்கு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் நிலை இருந்தது. இதனால், கிராமப்புற ஏழை, எளிய மக்கள் பல்வேறு இடையூறுகளைச் சந்தித்தனா். இந்த நிலையில், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில், தேசிய கண் பாா்வையிழப்பு மற்றும் தடுப்புத் திட்டத்தின் வழிகாட்டுதல்படி, அரூா் அரசு மருத்துவமனையில் கண் சிகிச்சைப் பிரிவு மற்றும் கண் அறுவை சிகிச்சை அரங்கு தொடங்கப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சை அரங்கில் நவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. எனவே, அரூா் அரசு மருத்துவமனையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கண் சிகிச்சைப் பிரிவு மற்றும் கண் அறுவைச் சிகிச்சை அரங்கு உள்ளிட்ட மருத்துவ வசதிகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
இந்த விழாவில் தருமபுரி மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநா் ம.சாந்தி, மாவட்ட தேசிய சுகாதாரக் குழும நியமன அலுவலா் பாலாஜி, கண் மருத்துவா் வெண்ணிலாதேவி, கண் மருத்துவ உதவியாளா் கு.கலையரசன், மூத்த மருந்தாளுநா் கோவிந்தராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
நன்றி
தினமணி