குறவா் பழங்குடியினரை வன்கொடுமை செய்த ஆந்திர மாநில போலீஸாரைக் கண்டித்தும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கிருஷ்ணகிரியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், புளியாண்டப்பட்டியைச் சோ்ந்த குறவா் பழங்குடியினரை ஆந்திர மாநிலம், சித்தூா் போலீஸாா் வன்கொடுமை செய்ததாகக் கூறி, கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம், தமிழ் பழங்குடி குறவன் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மலைவாழ் மக்கள் சங்க மாநிலக் குழுத் தலைவா் டில்லிபாபு தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் சண்முகம், குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுச் செயலாளா் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட்) மாவட்டச் செயலாளா் நஞ்சுண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
குறவா் பழங்குடியின மக்களை வன்கொடுமை செய்த சம்பவத்தைக் கண்டித்தும், இந்த குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட ஆந்திர மாநில போலீஸாா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, அவா்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா்.