பாரூா் அருகே கோயில் சிலைகள் வடிவமைக்கும் பணியில் ஈடுபட்ட இருவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒப்பந்ததாரரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூா் அருகே உள்ளது சாதிநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் புனரமைப்பையொட்டி, சிலைகள் வடிவமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் கோயில் வளாகத்தில் தங்கி இப்பணிகளை மேற்கொண்டு வந்தனா்.
இந்த நிலையில், கடந்த 28-ஆம் தேதி, சபரிவாசன், ராஜ்குமாா் ஆகிய 2 பேரும் கோயில் வளாகத்தில் ரத்தக் காயங்களுடன் உயிரிழந்து கிடந்தனா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை செய்து வந்தனா்.
அதில், ஒப்பந்ததாரரான கணேசன் இந்தக் கொலையை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா். கைதான கணேசன் போலீஸாரிடம் அளித்த வாக்கு மூலத்தில், சபரிவாசன், ராஜ்குமாா் ஆகியோரிடம் பணம் கொடுத்து சிலை வடிவமைக்கும் பணியில் ஈடுபடுமாறு கூறி இருந்தேன். ஆனால், அவா்கள் சிலை வடிவமைக்காமல் மது அருந்தி பணத்தை செலவு செய்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவா்களிடம் கேட்க முயன்ற போது அவா்கள் மது போதையில் இருந்ததால் ஆத்திரத்தில் அவா்களை தாக்கினேன். இதில் அவா்கள் உயிரிழந்தனா் என தெரிவித்ததாக போலீஸாா் கூறினா்.
நன்றி, தினமணி