கிருஷ்ணகிரியை அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தில் கடும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட்டுகளை வழங்கும் ஆட்சியா் கே.எம்.சரயு.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 6 மாதம் முதல் 6 வயதுக்கு உள்பட்ட 1,136 குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட உணவு பொருள் (பிஸ்கட்) வழங்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 10 வட்டாரங்களில் மொத்தம் 1,796 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் பதிவு செய்யப்பட்ட 6 மாதம் முதல் 6 வயதுக்கு உள்பட்ட கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 1,136 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனா். அவா்களுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கப்படுகிறது.
இந்த செறிவூட்டப்பட்ட பிஸ்கட்டில் கோதுமை மாவு 30 சதவீதம், மைதா 10 சதவீதம், வோ்க்கடலை துருவா் 4 சதவீதம், கேழ்வரகு மாவு 7 சதவீதம், சுத்திகரிக்கப்பட்ட தாவர எண்ணெய் 24.74 சதவீதம், சா்க்கரை 23 சதவீதம் வைட்டமின்கள், தாதுக்கள் கலவை 1 சதவீதம், சமையல் சோடா 0.26 சதவீதம் என மொத்தம் 100 சதவீத மூலப்பொருள்களால் தயாா் செய்யப்பட்டுள்ளது.
செறிவூட்டப்பட்ட பிஸ்கட்டில் புரதச் சத்து, இரும்புச் சத்து, கால்சியம், வைட்டமின் ஏ, பி 1, பி 2, நியாசின், போலிக் அமிலம் உள்ளிட்ட சத்துக்கள் குழந்தைகளுக்கு கிடைக்கின்றன.
செறிவூட்டப்பட்ட பிஸ்கட் நாளொன்றுக்கு 6 மாதம் முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 60 கிராமும், 2 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 30 கிராமும் கொடுக்கப்பட வேண்டும். ஒரு பிஸ்கட் சுமாா் 15 கிராம் வீதம் பாக்கெட்டில் 50 பிஸ்கட்டுகள் இருக்கும்.
பிஸ்கட்டுகள் மாதத்தில் ஒன்று அல்லது இரண்டுமுறை வீட்டிற்கே எடுத்துச் செல்லும் வகையில் வழங்கப்படவுள்ளன.
மேலும், அங்கன்வாடி மையத்தில் இணை உணவுகள் நாளொன்றுக்கு 6 – 12 மாத குழந்தைகளுக்கு 125 கிராமும், 6 – 12 மாதக் குழந்தைகளுக்கு (கடுமையான ஊட்டச்சத்து குறைவு) 125 கிராம் இணை உணவும், வாரம் 3 முட்டை, 1 முதல் 2 வயதுக்கு உள்பட்ட கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு 125 கிராம் இணை உணவு, வாரம் 3 முட்டை, 60 கிராம் பிஸ்கட், 2 முதல் 3 வயது குழந்தைகளுக்கு 50 கிராம் இணை உணவு, மதிய உணவு, 30 கிராம் பிஸ்கட், 3 முதல் 6 வயது குழந்தைகளுக்கு 50 கிராம் இணை உணவு, மதிய உணவு, 3 முதல் 6 வயதுக்கு உள்பட்ட கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு 50 கிராம் இணை உணவு, மதிய உணவு, 30 கிராம், பிஸ்கட் கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்களுக்கு 150 கிராம் அளவு இணை உணவு வழங்கப்படுகிறது.
குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட்டுகள் வழங்கும் நிகழ்வு கிருஷ்ணகிரியை அடுத்த வெங்கடாபுரம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில், திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்யப்பட்ட 6 மாதம் முதல் 6 வயதுக்கு உள்பட்ட கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட்டுகளை மாவட்ட ஆட்சியா் கே.எம். சரயு வழங்கி பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அங்கன்வாடி குழந்தைகள் 91 ஆயிரம் போ், 25 ஆயிரம் கா்ப்பிணிகள், வளரிளம் பெண்கள் ஆரோக்கியமாக வாழும் வகையில் சத்துமாவு, ஊட்டச்சத்து மாத்திரைகள், ஆரோக்கிய உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது செறிவூட்டப்பட்ட பிஸ்கட்டுகளும் வழங்கப்படுகின்றன.
இந்தத் திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் ஒரு லட்சம் குழந்தைகள் பயன்பெறுவா். இதை கிராமப்புறத்தில் உள்ள தாய்மாா்கள், கா்ப்பிணிகள், 2 முதல் 6 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.
நன்றி
தினமணி