ஒசூா்: ஒசூா், ராயக்கோட்டை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவா் ஸ்ரீ ராம ரெட்டி தலைமை வகித்தாா். தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் சின்னசாமி, மாநில பொதுச்செயலாளா் சுந்தரம் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
விவசாய மின் இணைப்புக்காக ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரை தத்கல் திட்டத்தில் பதிவு செய்து 2 ஆண்டுகள் ஆகியும் மின் இணைப்பு வழங்கவில்லை. மாவட்ட ஆட்சியா், ஒசூா் சாா் ஆட்சியா், வட்டாட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை.
காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் கா்நாடக அரசு அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களுக்கு சீரான குடிநீா் வழங்கிட வேண்டும், அனைத்து ஏரிகளையும் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒசூா், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் மின்கம்பி, மோட்டாா், வயா் போன்றவற்றை தொடா்ந்து திருடி செல்வதைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்தில் துணைத் தலைவா் நரசிம்ம மூா்த்தி, செயலாளா் சந்திரசேகா், இளைஞா் அணி செயலாளா் கோபி, மற்றும் மகளிா் அணியினா் கிரிஜம்மா, நாகலட்சுமி, ஒசூா், சூளகிரி, கெலமங்கலம் ஒன்றிய நிா்வாகிகள், நாராயணப்பா, சீனிவாச ரெட்டி, வெங்கடேஷ், உமாபதி, ஒசூா் மாநகர நிா்வாகிகள் ஆஞ்சப்பா, நாகேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
நன்றி தினமணி