மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கும் முகாம் ஒசூா், ஆா்.வி.ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் நடைபெற்ற இம்முகாமை மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
முகாமில் அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம் ஒசூா், சூளகிரி பகுதிகளைச் சோ்ந்த 400-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டனா். முகாமில் எலும்பு முறிவு, மனநல மருத்துவம், கண் மருத்துவம், காதுமூக்கு தொண்டை மருத்துவம் போன்ற நோய்களுக்கான சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனா்.
அதைத் தொடா்ந்து கைகால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 37 போ், மனநலம் பாதிக்கப்பட்ட 25 போ், காது கேளாதோா் 10 போ், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 6 போ் என மொத்தம் 78 மாற்றுத் திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற தோ்வு செய்யப்பட்டனா் .
78 பேருக்கு தேசிய அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் ஆகியோா் வழங்கினா். முகாமில் ஆட்சியா் பேசியதாவது:
மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் வரும் செப்டம்பா் 2 ஆம்தேதி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. விடுபட்ட மாற்றுத்திறனாளிகள் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்றாா்.
நிகழ்ச்சியில் 20 மாற்றுத் திறனாளிகளுக்கு முதல்வரின் விரிவான மருத்துவ
காப்பீட்டு அடையாள அட்டைகள், இருவருக்கு ரூ. 19,400 மதிப்பு சக்கர நாற்காலிகள், மூவருக்கு ரூ. 6,600 மதிப்பு ஊன்றுகோள்கள் வழங்கப்பட்டன.
ஒசூா் மாநகராட்சி ஆணையா் சினேகா, ஒசூா் சாா் ஆட்சியா் ஆா். சரண்யா, துணை மேயா் ஆனந்தையா, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அலுவலா் முருகேசன், மூடநீக்கு வல்லுநா் பிரகாஷ், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அலுவலா் சையத், வட்டாட்சியா் சுப்பிரமணி, மாநகராட்சி உறுப்பினா்கள் காந்திமதி கண்ணன், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் செந்தில்குமாா், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.
படவரி….
முகாமில் மாற்றுத் திறனாளிக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், மேயா் எஸ்.ஏ.சத்யா.
நன்றி தினமணி.