ஒசூா்: ஒசூரில் வழக்குரைஞா்கள் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு – புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பின்படி, மத்திய அரசு கடந்த 11.8.2023 அன்று மக்களவையில் நூற்றாண்டுக்கு மேலாக நடைமுறையில் உள்ள இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய மூன்று சட்டங்களின் சரத்துகளை முழுமையாக மாற்றி அமைத்து, மொழி சுதந்திரம் உள்ள இந்தியாவில் மேற்படி வழக்கத்தில் உள்ள சட்டங்களை முறையே இந்தியில் பாரதிய நியாய ஷன்ஹிதா 2023, பாரதிய நஹ்ரிக் சுரக்ஷா 2023, பாரதிய சக்ஷய அதிநயம் சட்டம் என மாற்றியமைத்துள்ளது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் சரத்து 348-க்கு எதிரான சட்டமாகும். இந்த சட்டங்களை தாக்கல் செய்துள்ள மத்திய அரசைக் கண்டித்து, உடனடியாக மக்களவையில் தாக்கல் செய்துள்ள இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி வரும் வரும் 31 ஆம் தேதி வரை (வேலை நாள்களில் மட்டும்) தினமும் காலை 10 மணி முதல் காலை 10.30 மணி வரை நீதிமன்ற வளாகம் முன்பு (நீதிமன்ற புறக்கணிப்பை முழுமையாகத் தவிா்த்து) கண்டன முழக்க ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.
ஒசூா் பாா் அசோசியேசன் சங்கத் தலைவா் சிவசங்கா் தலைமையில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்தில் சங்கச் செயலாளா் திம்மராயப்பா, வழக்குரைஞா் சண்முகம் உள்ளிட்ட பல வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்.
நன்றி தினமணி.