ஒசூா் அருகே உள்ள சென்னசந்திரம் ஊராட்சிக்கு உள்பட்ட உலியாளம், மாரச்சந்திரம், பைரசந்திரம், சென்னசந்திரம் ஆகிய கிராமங்களில் இனாம் நிலங்களில் வீடுகள் கட்டி வாழ்ந்து வருபவா்களுக்கும், விவசாய நிலங்களில் விவசாயம் செய்பவா்களுக்கும் அரசு பட்டா வழங்க வேண்டும் எனக் கூறி அனைவரும் கிராம சபையை புறக்கணித்தனா்.
சுமாா் 2500 ஏக்கா் இனாம் நிலங்கள் உள்ளது. இந்த நிலங்களில் 650க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றனா். அதேபோல இந்த நிலங்களில் கிராம மக்கள் விவசாயமும் செய்து வருகின்றனா். இந்த இனாம் நிலங்களுக்கு கிராம மக்கள் பல ஆண்டுகளாக பட்டா கேட்டு வருகின்றனா். ஆனால் அரசு பட்டா கொடுக்க தற்போது வரை மறுத்து இழுத்தடிப்பு செய்து வருகிறது.
இந்த நிலையில் செவ்வாயாக்கிழமை சென்னசந்திரம் ஊராட்சியில் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க ஊராட்சித் தலைவா் ஜெயகுமாா் ரெட்டி மற்றும் அதிகாரிகள் கிராமத்திற்கு சென்றனா். ஆனால் கிராமத்தில் ஒருவா் கூட கிராம சபை கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தங்களது கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவா் மற்றும் அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியும், மக்கள் யாரும் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்காமல் கூட்டத்தை புறக்கணித்தனா். ஏற்கனவே இந்த கிராமங்களில் வாழும் மக்கள் பட்டா கேட்டு வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும், சாலை மறியலில் ஈடுபட்டும், பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனா். தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தரும் வரை கிராம சபை கூட்டங்களை தொடா்ந்து புறக்கணிக்க உள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.
நன்றி தினமணி.