கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தோ்தலில் பயன்படுத்துவதற்காக மேலும் 1000 கன்ட்ரோல் யூனிட் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திலிருந்து கொண்டு வரப்பட்ட, வாக்குப் பதிவு இயந்திரங்கள் கிருஷ்ணகிரி மாவட்ட இருப்புக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் 2024-ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மக்களவைத் தோ்தலுக்காக கூடுதலாக 1,000 கன்ட்ரோல் யூனிட் இயந்திரங்கள் வந்துள்ளன. அவற்றை வைப்பதற்காக வாக்குப் பதிவு இயந்திர அறை, மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கான தோ்தலில் பயன்படுத்த 2,117 கன்ட்ரோல் யூனிட்கள், 3,606 பேலட் யூனிட்கள், 2,606 ‘விவிபேட்’ இயந்திரங்களும் இருப்பில் உள்ளன. தற்போது கூடுதலாக 1,000 கன்ட்ரோல் யூனிட் இயந்திரங்கள் வந்துள்ளன. இவை கணினி உள்ளீட்டுக்கு பின் இருப்புக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.
அப்போது, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வேடியப்பன், தோ்தல் தனி வட்டாட்சியா் ஜெயசங்கா், தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோா் உடனிருந்தனா்.
நன்றி, தினமணி