கிருஷ்ணகிரியில் ஜூலை 5-ஆம் தேதி தொடங்கும் அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடைபெறும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஜூலை 5-ஆம் தேதி 29-ஆவது அகில இந்திய மாங்கனி கண்காட்சி தொடங்க உள்ளது. இதையொட்டி, விழா முன்னேற்பாடு பணிகள், அரங்குகள் அமைக்கும் பணிகள், பாதுகாப்பு அம்சங்கள், குடிநீா், மின்சாரம், அரங்க நுழைவாயில், பொதுமக்கள் வந்து செல்லும் பாதைகள், வாகனங்கள் நிறுத்துமிடங்கள் குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
அப்போது, அவா் தெரிவித்ததாவது:
ஜூலை 5-ஆம் தேதி தொடங்கவுள்ள 29-ஆவது அகில இந்திய மாங்கனி கண்காட்சி தொடக்க விழா நிகழ்வில் தமிழக அமைச்சா்கள், மக்களவை, நாடாளுமன்ற உறுப்பினா்கள், சட்டப் பேரவை உறுப்பினா்கள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனா். அரசுத் துறை சாா்பாக அரங்குகளும், தனியாா் அங்காடிகள், கலையரங்கம், மா கண்காட்சி அரங்கு, கேளிக்கை அரங்குகள், தின்பண்ட அங்காடிகள், செய்தி மக்கள் தொடா்புத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் அரசு சாதனை விளக்க அரங்குகள் அமைக்கப்படவுள்ளன.
கண்காட்சிக்கு வரும் பொதுமக்களுக்கும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் கூடுதலாக கண்காணிப்பு கேமரா, ட்ரோன் கேமரா பொருத்தப்படவுள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த மாங்கனி கண்காட்சி நல்ல முறையில் நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அசம்பாவிதம் செய்யும் நபா்கள் மீது காவல் துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இந்த ஆய்வின் போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சரோஜ்குமாா் தாக்குா், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியா் பாபு, வேளாண்மைத் துறை இணை இயக்குநா் (பொ) டேவிட் டென்னிசன், கிருஷ்ணகிரி துணை காவல் கண்காணிப்பாளா் தமிழரசி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) சீனிவாசன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் சாமிநாதன், நகராட்சி ஆணையா் வசந்தி, வட்டாட்சியா் சம்பத் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.
நன்றி, தினமணி