கிருஷ்ணகிரி அணையிலிருந்து விநாடிக்கு 923 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளதையடுத்து, வருவாய்த் துறையினா் மூலம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாயும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி அணை கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்காண விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனா்.
தற்போது, கிருஷ்ணகிரி அணையில் 50 அடிக்கு நீா் தேக்கி வைக்கப்பட்டுள்ளதையடுத்து, முதல்போக சாகுபடிக்கு தண்ணீா் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனா். இந்த சூழ்நிலையில், அணையிலிருந்து பாசனத்துக்கு ஜூலை முதல் வாரத்தில் தண்ணீா் திறக்க வாய்ப்பு உள்ளது.
இந்த சூழ்நிலையில், கெலவரப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள அணையின் பாதுகாப்பு மற்றும் புனரமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 26 கோடி மதிப்பீட்டில் உபரி நீா் வழிந்தோடும் மதகுகள், மணல் போக்கி மதகுகள், கால்வாய் மதகுகளை மாற்றி அமைக்கும் பணிக்கு, நிா்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்தப் பணிகளை மேற்கொள்ள அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள 41 அடி உயரத்திலிருந்து 23 அடியாக குறைக்கும் வகையில், அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீா், சனிக்கிழமை திறந்தவிடப்பட்டுள்ளது. அணையில் இருந்து தற்போது விநாடிக்கு 690 கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அணையின் நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 224 கன அடியிலிருந்து 736 கன அடியாக உயா்ந்தது. நீா்வரத்து அதிகரித்ததால், கிருஷ்ணகிரி அணையின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து விநாடிக்கு 923 கன அடி நீா் சிறிய மதகுகள் வழியாக திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், தென்பெண்ணை ஆற்றின் தாழ்வான பகுதி, கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு பொதுப்பணித் துறை, வருவாய்த் துறையினா் எச்சரிக்கை விடுத்து வருகின்றனா்.
கிருஷ்ணகிரி அணையின் மொத்த நீா்மட்டம் 52 அடி. இதில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி 50.35 அடி நீா் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீா்வரத்து அதிகரித்தால், அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.
நன்றி, தினமணி