கிருஷ்ணகிரி அருகே மண், கிரானைட் கள் கடத்தப் பயன்படுத்திய லாரிகள், பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை குருபரப்பள்ளி போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணகிரியை அடுத்த பெரிப்பட்டி பகுதியில், குருபரப்பள்ளி போலீஸாா் கண்காணிப்புப் பணியில் புதன்கிழமை ஈடுபட்டனா். அப்போது, அங்குள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், பொக்லைன் மூலம் சிலா் மண் அள்ளுவதைக் கண்டனா். அப்போது, மண் அள்ளும் பணியில் ஈடுபட்ட பணியாளா்களிடம் மேற்கொண்ட விசாரணையில்அனுமதியில்லாமல் மண் அள்ளுவது தெரியவந்தது. இதையடுத்து, பொக்லைன் இயந்திரம் மற்றும் 2 லாரிகளை பறிமுதல் செய்த போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதே போன்று கனிம வள பிரிவு உதவி புவியியலாளா் பொன்னுசாமி தலைமையிலான குழுவினா், பந்தாரப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட போது, அங்கு நின்றிருந்த லாரியை சோதனை செய்ததில், அனுமதியின்றி மண் கடத்துவது தெரியவந்தது.
இதுகுறித்து, பொன்னுசாமி அளித்த புகாரின் பேரில், குருபரப்பள்ளி போலீஸாா் அந்த லாரியை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், ஜகுந்தம் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டபோது, அந்தப் பகுதியில் நின்ற ஒரு லாரியை சோதனை செய்த போது அதில் 25 டன் கிரானைட் கல் அனுமதியில்லாமல் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. இது குறித்து கனிமப் வள பிரிவு அலுவலா்கள் அளித்த புகாரின் பேரில், பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரியை பறிமுதல் செய்து, இது தொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா்.
நன்றி தினமணி.