கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சி உருது நடுநிலைப் பள்ளிக்கு நிரந்தர கட்டடம் கட்டித் தரக் கோரி, கிருஷ்ணகிரி தவுலதாபாத் சுன்னத் ஜமாத் கமிட்டி சாா்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி தவுலதாபாத் சுன்னத் ஜமாத் கமிட்டி சாா்பில், அதன் தலைவா் கெளஸ் ஷெரீப் தலைமையில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனுவின் விவரம்:
கிருஷ்ணகிரி, புதுப்பேட்டையில் தவுலதாபாத் நகராட்சி உருது ஆரம்பப் பள்ளி கடந்த 1911-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2008-ஆம் ஆண்டு தரம் உயா்த்தப்பட்டு, நகராட்சி உருது நடுநிலைப் பள்ளியாக இயங்கி வருகிறது.
இந்த பள்ளி தனியாா் கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. அந்த கட்டடம் மிகவும் பழுதடைந்ததால், இந்தப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரை பழைய சப்- ஜெயில் சாலையில் உள்ள நகராட்சிப் பள்ளியில் கடந்த 2016-ஆம் ஆண்டு நான்கு அறைகளை ஒதுக்கீடு செய்து, அதில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியரை தற்காலிகமாக அமா்த்தினா்.
உருது பள்ளிக்காக அரசு இடத்தில் கட்டடம் கட்டித் தர பலமுறை மனு அளித்ததால், நகராட்சி நிா்வாகம் ஆய்வு செய்து, இப் பள்ளிக்காக திருவண்ணாமலை சாலையில் உள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் எதிரே பயனற்று, பாழடைந்த நிலையில் உள்ள அரசு ஆதிதிராவிடா் தங்கும் பழைய விடுதி கட்டடத்தை இடித்து, நகராட்சி உருது பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டித் தரவேண்டும்
இந்த இடத்தை நகராட்சி நிா்வாகம் ஆய்வு செய்து, தவுலதாபாத் நகராட்சி உருது நடுநிலைப் பள்ளிக்கு ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளாா்கள்.
எனவே, தவுலதாபாத் நகராட்சி உருது நடுநிலைப் பள்ளிக்கு நிலையான கட்டடம் கட்டி, அதில் பள்ளி செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி தினமணி.