கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு தொல்லியல் குறித்த கட்டுரைப் போட்டிகள் கிருஷ்ணகிரி உள்ளிட்ட மூன்று இடங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு தொல்லியல் குறித்த கட்டுரைப் போட்டிகள் , ஊத்தங்கரை, ஒசூா், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் நடைபெற்றன. அரசுப் பள்ளிகளில் 9 , 10-ஆம் வகுப்புகள் பயிலும் மாணவ, மாணவியா் 150 போ் பங்கேற்றனா்.
‘பண்டைத் தமிழ்ச் சமூகம்’ என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி இரண்டு மணி நேரம் நடைபெற்றது. முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவா்களை தோ்ந்தெடுத்து, முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 2 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. ஆயிரம் வீதம் வழங்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்தப் போட்டியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கே.பி.மகேஸ்வரி, தொடங்கி வைத்தாா். அப்போது, மாவட்ட வரலாற்று ஆவணப்படுத்தும் குழுத் தலைவா் நாராயணமூா்த்தி, ஒருங்கிணைப்பாளா் தமிழ்ச்செல்வன், தலைமை ஆசிரியா் மகேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் கோவிந்தராஜ், தருமபுரி மாவட்ட காப்பாட்சியா் பரந்தாமன் ஆகியோா் நடுவா்களாக செயல்பட்டு சிறந்த முதல் மூன்று கட்டுரையாளா்களைத் தோ்வு செய்கின்றனா். தோ்வு செய்யப்படும் மூன்று பேரும் மாநில அளவிலான கட்டுரைப் போட்டிக்கு தகுதி பெறுவா். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு முதல் பரிசாக ரூ. 50 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 25 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 10 ஆயிரம், 3 நபா்களுக்கு ஆறுதல் பரிசாக ரூ.15 ஆயிரம் வழங்கப்பட உள்ளன.