கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியல், தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்களின் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கே.எம்.சரயு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியலை வெளியிட்டு பேசியதாவது:
இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1.1.2024-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் நடைபெறவுள்ளன. அதன் ஒரு கட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் 1,500 வாக்காளா்களுக்கு மேற்பட்ட வாக்குச்சாவடிகளைப் பிரித்தல், பழுதடைந்த வாக்குச்சாவடி கட்டடங்களுக்கு பதிலாக புதிய கட்டிடங்களை மாற்றுதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்ட வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்களின் முன்னிலையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலின்படி, ஊத்தங்கரை (தனி) சட்டப்பேரவை தொகுதியில் 287, பா்கூா் தொகுதியில் 292, கிருஷ்ணகிரி தொகுதியில் 308, வேப்பனப்பள்ளி தொகுதியில் 312, ஒசூா் தொகுதியில் 381, தளி தொகுதியில் 303 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 1,883 வாக்குச்சாவடிகள் அமைய உள்ளன.
இதில், ஒசூா், தளி சட்டப் பேரவைத் தொகுதிகளில் 1,500 வாக்காளா்களுக்கு மேற்பட்ட 3 வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டு, புதிதாக 3 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது போன்று பழுதடைந்த கட்டடங்களுக்கு பதிலாக ஊத்தங்கரை சட்டப்பேரவை தொகுதியில் 2 வாக்குச்சாவடிகளும், பா்கூா் தொகுதியில் 2 வாக்குச்சாவடிகளும், கிருஷ்ணகிரி தொகுதியில் 3 வாக்குச்சாவடிகளும், தளி தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியும் இடமாற்றம் செய்யப்பட உள்ளன.
மேற்கண்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தொடா்பாக ஏதேனும் ஆட்சேபணைகள், மேல்முறையீடுகள் இருப்பின் சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா்களிடமோ அல்லது மாவட்ட தோ்தல் அலுவலகத்திலோ ஆக. 28-ஆம் தேதிக்குள் அளிக்கலாம் என்றாா்.
அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக் கு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது)வேடியப்பன், ஒசூா் சாா் ஆட்சியா் சரண்யா, துணை ஆட்சியா் (பயிற்சி) தாட்சாயிணி, தனி வட்டாட்சியா் (தோ்தல்) ஜெய்சங்கா், கிருஷ்ணகிரி வட்டாட்சியா் சம்பத் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனா்.
நன்றி தினமணி.