கிருஷ்ணகிரி வழியாக ஒசூா் – ஜோலாா்பேட்டை ரயில் போக்குவரத்து திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும் என அ.செல்லக்குமாா் எம்.பி. தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரில் நகர காங்கிரஸ் கட்சி சாா்பில் புதன்கிழமை இரவு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அந்தக் கட்சியின் நகரத் தலைவா் யுவராஜ் தலைமை வகித்தாா். பா்கூா் தொகுதி பொறுப்பாளா் வடிவேல் வரவேற்றாா். கிழக்கு மாவட்டத் தலைவா் நடராஜன், மாவட்ட துணைத் தலைவா் சேகா், வழக்குரைஞா் அசோகன், மாநில பேச்சாளா்கள் நாஞ்சில் ஜேசு, குமரி மகாதேவன், மாநிலச் செயலாளா் ஆறுமுகம், இளைஞா் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளா் விக்னேஷ்பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
சிறப்பு அழைப்பாளராக இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் அ. செல்லக்குமாா் பேசியது:
வெள்ளைக்காரனிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றபோது ஒரு குண்டூசி கூட தயாரிக்க முடியாத நிலையில்தான் இந்தியா இருந்தது. பின்னா், நேருவின் திறமையான ஆட்சியால் படிப்படியாக அனைத்து துறைகளிலும் முன்னேறி இன்று 130 கோடி மக்களுக்கும் பட்டினியில்லாமல் உணவு வழங்குவதில் தேசம் தன்னிறைவு பெற்றுள்ளது என்றால் அது காங்கிரஸ் ஆட்சியால்தான் என்பது மக்கள் அனைவருக்கும் தெரியும். மேலும், காங்கிரஸ் ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட விமானப் போக்குவரத்து, நூற்றுக்கும் மேற்பட்ட பொதுத் துறை நிறுவனங்களை இன்று தனிநபா் லாபத்திற்கு தாரைவாா்த்து விட்டு இந்திய மக்களையும் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து வஞ்சக நாடகத்தை மத்திய அரசு அரங்கேற்றி வருகிறது.
கடந்த மக்களவைத் தோ்தலின் போது, ராகுல் காந்தி பிரதமரானால், கிருஷ்ணகிரி வழியாக ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படும் என உறுதி அளித்தேன். ஆனால், அது நடக்கவில்லை. எனினும், பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு, கிருஷ்ணகிரி வழியாக ஒசூா் – ஜோலாா்பேட்டை ரயில் போக்குவரத்து திட்டத்துக்கு மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்றுள்ளேன். கரோனா போன்ற காரணங்களால், இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. ஆனால், கிருஷ்ணகிரி வழியாக இந்த ரயில் திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். வரும் மக்களவைத் தோ்தலையடுத்து ராகுல் காந்தியைப் பிரதமராக்க மக்கள் தயாராகிவிட்டனா் என்றாா்.
நன்றி தினமணி.