கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே காதல் திருமணம் செய்த மகனை வெட்டிக் கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டார்.
ஊத்தங்கரை அருகேயுள்ள அருணபதி கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி (50) – சுந்தரி (40) தம்பதியின் மகன் சுபாஷ் (25), மகள்கள் பவித்ரா (23), சுஜி (20).
சில ஆண்டுகளுக்கு முன்னர் தண்டபாணி, தனது குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி, பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்தார். அப்போது, சுபாஷ், தன்னுடன் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்த ஜெயங்கொண்டம் அனுசுயாவைக் (25) காதலித்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், சுபாஷின் காதலுக்குத் தண்டபாணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
எனினும், எதிர்ப்பை மீறி கடந்த மார்ச் 27-ம் தேதி சுபாஷ், அனுசுயாவைத் திருமணம் செய்து கொண்டார். பின்னர், இருவரும் திருப்பத்தூரில் குடியேறினர். அங்குள்ள தனியார் நிதி நிறுவனத்தில் சுபாஷ் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், தண்டபாணி, அருணபதியில் உள்ள தனது தாய் கண்ணம்மாளை(70) சந்தித்து,“சுபாஷை வீட்டுக்கு வரச்சொல்லுங்கள். அங்கு சமாதானம் பேசிக்கொள்வோம்” என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, சுபாஷ், அனுசுயா ஆகியோர் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று அருணபதிக்கு வந்தனர். ஏற்கெனவே அங்கு வந்திருந்த தண்டபாணி, தனது மகன் மற்றும் மருமகளிடம் சகஜமாகப் பேசியுள்ளார். நேற்று முன்தினம் இரவு சுபாஷ், அனுசுயா, கண்ணம்மாள் ஆகியோர் வீட்டின் உள்ளே உறங்கினர். தண்டபாணி வீட்டின் வெளியேஉறங்கினார்.
நேற்று அதிகாலை 5 மணியளவில், தண்டபாணி வீட்டுக்குள் புகுந்து, அங்கு உறங்கிக் கொண்டிருந்த சுபாஷை அரிவாளால் வெட்டினார். அவரது அலறல் சப்தம்கேட்டு எழுந்து வந்து, தடுக்க முயன்ற கண்ணம்மாள் மற்றும் அனுசுயா ஆகியோரையும் அரிவாளால் வெட்டிவிட்டு, பின்னர் தண்டபாணி அங்கிருந்து தப்பினார். இதில், சுபாஷ்,கண்ணம்மாள் ஆகியோர் அந்தஇடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த அனுசுயா, மயங்கி விழுந்தார்.
அனுசுயா வாக்குமூலம்…: நேற்று காலை 6 மணியளவில் அனுசுயா படுகாயத்துடன் கிடப்பதைப் பார்த்த கிராம மக்கள் அவரைமீட்டு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தகவலறிந்து வந்த ஊத்தங்கரை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அமர் ஆனந்த், அனுசுயாவிடம் வாக்குமூலம் பெற்றார்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காகக் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஊத்தங்கரை டிஎஸ்பி அமலா அட்வின் தலைமையிலானபோலீஸார், சுபாஷ், கண்ணம்மாளின் சடலங்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தற்கொலை முயற்சி: மேலும், தண்டபாணி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து, 5 தனிப்படைகள் அமைத்து அவரைத் தேடி வந்தனர். இந்நிலையில், தீர்த்தமலை பகுதியில் தலை மறைவாக இருந்த தண்டபாணி, தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
பின்னர் அவர் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தபோது, போலீஸார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
25 நாட்களில் 2-வது கொலை: கடந்த 25 நாட்களுக்கு முன் கிருஷ்ணகிரி கிட்டம்பட்டியைச் சேர்ந்த சின்னபையன் மகன் ஜெகன் (28) என்பவர், காதல் திருமண விவகாரத்தில் மனைவியின் தந்தையால் வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நன்றி
இந்து தமிழ்