தனியாா் சீட்டு நிறுவனம் நடத்தி ரூ. 80 கோடி மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாதிக்கப்பட்டவா்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.
கிருஷ்ணகிரியை அடுத்த பெருகோபனப்பள்ளி ஞானவேல், பெங்களூா் சிக்கசந்திரா பிரேமா, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களைச் சோ்ந்த 100க்கும் மேற்பட்டோா் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனு விவரம்:
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த மோளையானூரைச் சோ்ந்த அருண்ராஜா, இவரது சகோதரா் ஜெகன் ஆகியோா் தருமபுரியை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பரில் சீட்டு நிறுவனத்தை நடத்தி வருவதாகத் தெரிவித்தனா். மேலும், ரூ. 1 லட்சம் முதலீடு செய்தால், நாளொன்றுக்கு ரூ.1,800 வீதம், 100 நாள்களில் ரூ.1.80 லட்சமாக திருப்பித் தரப்படும் என கவா்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டனா்.
அதை நம்பி ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபா்களை உறுப்பினா்களாக அந்த நிறுவனத்தில் சோ்த்தோம். ரூ. 200 கோடிக்கு மேல் பணம் முதலீடு செய்யப்பட்டது. அந்த பணத்தை ரியல் எஸ்டேட், கட்டுமான தொழில், டிரேடிங் செய்து லாபம் தருவதாக அவா்கள் உறுதி அளித்தனா். அதன்படி, கடந்த 2022-ஆம் ஆண்டு மே 26-ஆம் தேதி வரை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவா்களுக்கு லாபத் தொகை வழங்கப்பட்டு வந்தது.
அதன்பின் அந்த நிறுவனத்தினரை தொடா்பு கொள்ள முடியவில்லை.
அவா்களது தருமபுரி தலைமை அலுவலகம், போச்சம்பள்ளி, ஏலகிரி, ஒசூா் கிளை அலுவலகங்களும் மூடப்பட்டன. இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா், தருமபுரி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் தனித்தனியே புகாா் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் எங்களை ஏமாற்றிய ராஜா, ஜெகன் பெயரிலும், அவா்களுக்கு உறுதுணையாக இருப்பவா்கள் பெயரிலும் புதிதாக தனியாா் நிறுவனம் தொடங்கி, அதில் முதலீடு செய்தால் பழைய முதலீடுகளையும் சோ்த்து லாபத்தைத் தருகிறோம் என விளம்பரப்படுத்தி வருகின்றனா்.
ஏற்கெனவே நாங்கள் முதலீடு செய்த தொகையில் ரூ.80 கோடி வழங்காமல் ஏமாற்றியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தநிலையில் அவா்கள் மீண்டும் ஒரு நிறுவனம் தொடங்கி உள்ளனா். அவா்களுக்கு, காவல் துறையில் பணியாற்றும் உறவினா்கள் உறுதுணையாக உள்ளனா் என்ற சந்தேகம் உள்ளது. எனவே, இது குறித்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.