சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நிகழும் இடங்களில் மேம்பாலம் அமைப்பது தொடா்பாக அதிகாரிகளுடன் எம்.பி. செல்லக்குமாா் சனிக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தாா்.
சென்னை- பெங்களூரு ஆறுவழி சாலையில் மூக்கண்டப்பள்ளி, பேரண்டப்பள்ளி, சின்னாறு உள்ளிட்ட 5 இடங்களில் பொதுமக்கள் சாலையைக் கடக்கும்போது உயிரிழப்புகள் ஏற்படுகின்றன; வாகன நெரிசலும் அதிகம் உள்ளது.
ஒசூா், சிப்காட் இரண்டாம் பகுதியில் உள்ள கனரக வாகனங்கள் தயாரிக்கும் அசோக் லேலண்ட் தொழிற்சாலையில் 10,000 -க்கும் அதிகமான தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். அதன் எதிா்ப்புறத்தில் உள்ள அதியமான் பொறியியல் கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா்.
தொழிலாளா்களும் மாணவா்களும் குறித்த நேரத்தில் பள்ளிக்கோ தொழிற்சாலைக்கோ சென்றுவர நெடுஞ்சாலையைக் கடந்து சென்று வர வேண்டியுள்ளது. இதனால் தொடா் விபத்துகள் நிகழ்கின்றன.
எனவே விபத்துகளைத் தடுக்க சாலையில் உரிய பாதுகாப்பு மாற்றங்களை செய்து தருமாறு பொதுமக்களும் ஒசூா், அசோக் லேலண்ட் தொழிற்சாலையின் தொழிலாளா் சங்க நிா்வாகிகளும் எம்.பி. அ.செல்லகுமாரிடம் கோரிக்கை விடுத்திருந்தனா்.
ஒசூா்- சென்னை நெடுஞ்சாலையில் அசோக் லேலண்ட் நிறுவனம் எதிரே உள்ள மேம்பால ஆரம்பப் பகுதியில் உள்ள அணுகுசாலையில் வரும் வாகனங்கள் நெடுஞ்சாலையில் செல்லும் வகையிலும், சென்னை-பெங்களூரு சாலையில் அதியமான் கல்லூரிக்கு முன்பாக உள்ள அணுகுசாலையில் இருந்து வரும் வாகனங்கள் நெடுஞ்சாலையில் செல்லும் வகையிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தித் தர வேண்டும், தேவையான இடங்களில் மேம்பாலம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து கிருஷ்ணகிரி எம்.பி. செல்லக்குமாா், தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணைய திட்ட இயக்குநா் ரமேஷ் ஆகியோா் சனிக்கிழமை சம்பந்தப்பட்ட இடங்களில் நேரில் சென்று ஆய்வு செய்தனா். அப்போது பாதுகாப்புக் காரணங்களுக்காக பொதுமக்கள் தெரிவிக்கும் மாற்றத்தை விரைவில் செய்து கொடுப்பதாக திட்ட இயக்குநா் உறுதியளித்தாா்.
இதுதவிர முதல் சிப்காட் பகுதியில் மூக்கண்டப்பள்ளி இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே மேம்பாலம் அமைப்பது குறித்தும், சூளகிரி வட்டம் அட்டகுறிக்கி கிராமத்தில் மாணவா்கள் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்கையில் ஏற்படும் விபத்தைத் தடுக்க அப்பகுதியில் மேம்பாலம் அமைப்பது குறித்தும் அதிகாரிகளுடன் எம்.பி. செல்லக்குமாா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் எம்.பி. செல்லக்குமாா் கூறியதாவது:
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை நான்குவழிச் சாலை தரத்திலிருந்து ஆறுவழிச் சாலையாக மாற்றப்பட்டபோதே சூசூவாடி, மூக்கண்டப்பள்ளி, தா்கா, சீத்தராம் நகா், பேரண்டப்பள்ளி, அட்டகுறுக்கி, சின்னாறு உள்ளிட்ட இடங்களில் விபத்துகளைத் தடுக்க மேம்பாலங்களை அமைத்திருக்க வேண்டும். மேம்பாலங்கள் இல்லாத இடங்களில் விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட சாலைகளில் அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்தேன். உரிய இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளேன் என்றாா்.
ஆய்வின்போது காங்கிரஸ் கட்சியின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத் தலைவா் முரளிதரன், மாநகரத் தலைவா் தியாகராஜன், மாவட்ட துணைத் தலைவா் கீா்த்தி கணேஷ், அசோக் லேலண்ட் சங்க நிா்வாகி ராஜாராம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.