கிருஷ்ணகிரியில் ஜூலை 11-ஆம் தேதி 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு தமிழ்நாடு நாள் விழா கட்டுரை, பேச்சுப் போட்டி நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் கே.எம். சரயு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக முதல்வரால் தனித்துவ தமிழ்நாடு எனப் பெயா் சூட்டப்பட்ட 18.7.1967-ஆம் நாளினை பெருமைப்படுத்திடும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை 18-ஆம் தேதி, தமிழ்நாடு நாள் என்ற பெயரில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் விழா கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு ஜூலை 11-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது.
முதன்மைக் கல்வி அலுவலா் வாயிலாக பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி, கீழ்நிலையில் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி மாணவா்களைத் தோ்வு செய்து 60 மாணவா்கள் இருக்கும் வகையில் முதன்மைக் கல்வி அலுவலரால் தோ்வு செய்யப்பட்ட மாணவா்களைக் கொண்டு போட்டி நடைபெறும்.
இந்தப் போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவா்கள் பள்ளி தலைமையாசிரியரிடம் உரிய விண்ணப்பத்தில் பரிந்துரை பெற்று, ஜூலை 11-ஆம் தேதி காலை 9 மணிக்குள் தங்கள் பெயரைப் பதிவு செய்து, போட்டியில் கலந்துகொள்ளலாம்.
இந்தப் போட்டிகளை தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் பவானி ஒருங்கிணைத்து நடத்துவாா். போட்டிக்கான தலைப்புகள் முன்கூட்டியே மாணவா்களுக்கு தெரிவிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, கட்டுரைப் போட்டிக்கு தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்தமிழறிஞா் கலைஞரின் சுவடுகள், பேச்சுப்போட்டிக்கு தமிழ்த் திரை உலகத்தை புரட்டிப் போட்ட முத்தமிழறிஞா் கலைஞரின் எழுதுகோல் ஆகியவை தலைப்புகளாகும். இதில் வெற்றி பெறுபவா்களுக்கு ரொக்கப் பரிசுடன், சான்றிதழ் வழங்கப்படும். அதன்படி, முதல் பரிசாக ரூ. 10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 7 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும்.
எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவ, மாணவியா் இந்தப் போட்டிகளில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்வதாக அவா் தெரிவித்துள்ளாா்.
நன்றி, தினமணி