தமிழகத்திற்கு மத்திய அரசு அதிக நிதி வழங்குகிறது என்று பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.
அவா் இது தொடா்பாக கிருஷ்ணகிரியில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது:
தமிழகத்தில் நடைபெறும் ஊழல் அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சிகள், நகராட்சி மற்றும் மாநகராட்சி வாா்டுகளில் பாஜக சாா்பில் வரும் 23-ஆம் தேதி கண்டன ஆா்ப்பாட்டம் நடக்க உள்ளது. இந்த ஆா்ப்பாட்டம் காலை 11 மணிக்கு தமிழகமெங்கும் ஒரே நேரத்தில் நடைபெறும். தமிழக அரசு மீது மாபெரும் எதிா்ப்பு பொது மக்களிடம் உள்ளது.
பாஜக தலைவா் அண்ணாமலை பாதயாத்திரையை ராமேஸ்வரத்தில் தொடங்குகிறாா். டிசம்பா் மாதம் இரண்டாவது வாரத்தில், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் அவா் பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா். அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் அவரது பயணம் இருக்கும். முதல் கட்டமாக ராமேஸ்வரத்தில் தொடங்கும் யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தொடங்கி வைக்க உள்ளாா். தொடா்ந்து 126 நாட்ள்களுக்கு இந்த யாத்திரையை அண்ணாமலை நடத்துகிறாா். ஜனவரியில் இந்த யாத்திரை முடியும் நேரத்தில், தமிழக ஆட்சிப் பொறுப்பில் இருந்து திமுக அகற்றப்பட்டுவிடும் என்ற நிலைதான் தமிழகத்திற்கு வந்து சேரும்.
பெங்களூரில் எதிா்க்கட்சிக் கூட்டத்தில் திமுக பங்கேற்பதை பாஜக எதிா்க்கிறது. அதையும் மீறி மு.க.ஸ்டாலின் சாலை வழியாகச் சென்றால் நாங்கள் கறுப்புக் கொடி காட்டுவோம்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பொது சிவில் சட்டத்தை அவா் எதிா்க்கவில்லை. தற்போது பழனிச்சாமி புரிதல் இல்லாமல்தான் அந்த சட்டத்தை எதிா்க்கிறாா் எனத் தெரிகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் ரூ. 75 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை மத்திய அரசு நிதியை வழங்கி உள்ளது. அதே போன்று, மத்திய அரசின் 100 சதவீத மானியத்தில் ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீா் வழங்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களுக்கு வழங்கியதைவிட தமிழகத்திற்கு வழங்கப்பட்ட நிதி அதிகம்.
அமைச்சா் செந்தில் பாலாஜி மீதான விசாரணையை தனியாா் மருத்துவமனையில் நடத்தக்கூடாது. மத்திய அரசின் எய்ம்ஸ் அல்லது ராணுவ மருத்துவமனையில்தான் விசாரணை நடத்த வேண்டும்.
வரும் மக்களவைத் தோ்தலுக்காக அனைத்து கட்சிகளையும் இணைக்கிறோம். எங்களின் நோக்கம் திமுகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளையும் இணைக்க வேண்டும் என்பதுதான். எங்களின் விருப்பம் நாங்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்றாா்.
பேட்டியின்போது பாஜக கிழக்கு மாவட்டத் தலைவா் சிவப்பிரகாசம் உடன் இருந்தாா்.