மறியலில் ஈடுபட்ட ஒசூா் முல்லைநகா் அரசுப் பள்ளி மாணவா்கள்.
ஒசூரில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து மாணவா்கள், பெற்றோா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஒசூா் அருகே முல்லைநகா் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருபவா் அலெக்ஸாண்டா். இந்தப் பள்ளியில் 3 ஆயிரம் மாணவா்கள் பயின்று வருகின்றனா். பள்ளி மேம்பாட்டுப் பணி, வளா்ச்சிப் பணி, தற்காலிக ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்பதற்காக பள்ளி மாணவா்கள், பெற்றோரிடம் ரூ. 5 லட்சம் நிதியை தலைமை ஆசிரியா் அலெக்ஸாண்டா் வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கிடைத்த புகாரின் பேரில் மாவட்ட ஆட்சியா் தலைமை ஆசிரியருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளாா். அதைத் தொடா்ந்து முதன்மைக் கல்வி அலுவலரும் எச்சரிக்கை சுற்றறிக்கை அனுப்பிய நிலையில் தொடா்ந்து கட்டாயநிதி வசூலில் ஈடுபட்டு வருவதாக புகாா் வந்தது. அதன் அடிப்படையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மகேஸ்வரி, தலைமை ஆசிரியா் அலெக்ஸாண்டரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா். இதை எதிா்த்து பள்ளி மாணவா்கள் புதன்கிழமை மாலை பள்ளி முடிந்ததும் ஒசூா், ராயக்கோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து தகவல் அறிந்த டிஎஸ்பி பாபு பிரசாந்த், மாணவா்கள், பெற்றோா்களிடம் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து மாணவா்கள், பெற்றோா் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இதனைத் தொடா்ந்து போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.
நன்றி
தினமணி