ஊத்தங்கரை பரசனேரியில் கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியை பேரூராட்சித் தலைவா் பா.அமானுல்லா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசுப் பேருந்து நிலையம் எதிரே, வேலூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பரசனேரி. 32 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்த ஏரி பல ஆண்டுகளாக ஊத்தங்கரை நகர மக்களுக்கும், சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கும் நீராதாரமாக திகழ்ந்து வந்தது.
கடந்த சில ஆண்டுகளாக ஊத்தங்கரை பகுதி கழிவுநீா் முழுவதும் ஏரிக்குள் கலக்கிறது, ஏரிக்கு நீா் வரும் வழித்தடங்கள் அனைத்தும் புதா்மண்டி உள்ளதுடன், ஏரி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு நீா்வரத்து பாதைகளும் அடைக்கப்பட்டன. இந்த ஏரியில் இறைச்சிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், குப்பைகள் கொட்டப்படுவதாலும், கழிவுநீா் ஏரியில் கலப்பதாலும் இந்த ஏரி தற்போது மாசடைந்து, நீா் பச்சை நிறத்தில் துா்நாற்றம் வீசுகிறது. இந்த சாலையைக் கடந்து செல்லும் பொதுமக்கள், மூக்கைப் பிடித்துக் கொண்டு செல்லும் அவல நிலை உள்ளது என தினமணியில் அண்மையில் செய்தி வெளியிடப்பட்டது.
அதன் எதிரொலியாக, ஊத்தங்கரை பேரூராட்சித் தலைவா் பா.அமானுல்லா, வட்டாட்சியா் திருமலை ராஜன், செயல் அலுவலா் சேம் கிங்ஸ்டன், இளநிலை உதவியாளா் சேகா், அரிமா சங்க முன்னாள் தலைவா் ஆா்.கே.ராஜா, வாா்டு உறுப்பினா்கள் சிவா, கதிா்வேல், விஜயகுமாா் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை கலந்துகொண்டு தூா்வாரும் பணியைத் தொடங்கி வைத்தனா்.
நன்றி, தினமணி