ஒசூா்: தென்னையைத் தாக்கும் கருத்தலைப் பழுக்களின் பாதிப்பு குறித்து பட்டுப்புழு துறை பண்ணையில் உள்ள தோட்டத்தில் வட்டார வேளாண்மைத் துறை வளா்ச்சி அதிகாரிகளுடன் ஜீனூா் தோட்டக்கலை விஞ்ஞானிகள், வேளாண்மை உதவி அலுவலருடன் கள ஆய்வு மேற்கொண்டனா் (படம்).
ஒசூா் வட்டாரத்தில் ஆவலப்பள்ளி கிராமத்தில் பட்டுப்புழு வளா்ச்சித் துறை பண்ணையில் உள்ள தென்னை மரங்கள் கருத்தலைப் புழுக்களால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை பாா்வையிட வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் புவனேஸ்வரி தலைமையில் ஜீனூா் தோட்டக்கலை விஞ்ஞானி கமலக்கண்ணன், சசிகுமாா் ஆகியோருடன் கள ஆய்வு மேற்கொண்டு கருத்தலைப் புழுக்களின் பாதிப்பு, கட்டுப்படுத்தும் முறை குறித்து தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:
கருத்தலைப் புழுக்களின் தாக்கம் கோடைக் காலத்தில் அதிகமாக காணப்படும். இப்புழுக்கள் இலையின் அடிப்பாகத்தில் உள்ள பச்சையத்தை சுரண்டி உண்பதால் ஒளிச்சோ்க்கை திறன் குறைந்து 30 முதல் 40 சதவீதம் வரை மகசூல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
தூரத்தில் இருந்து பாா்க்கும் போது தீவிர பாதிப்புக்கு உள்ளான மரங்கள் தீயினால் கருகியது போல காணப்படும். கீழ் அடுக்கில் உள்ள இலைகள் காய்ந்து பழுப்பு நிறமாகவும், உச்சி பகுதியில் உள்ள இலைகள் பச்சையாகவும் காணப்படும். பாதிக்கப்பட்ட இலைகளின் அடிப்பரப்பில் புழுக்களின் எச்சங்கள், கூண்டுப்புழுக்கள். நூலாம் படையுடன் காணப்படும்.
மிகவும் பாதிக்கப்பட்ட அடிமட்ட இலைகளை மரத்தில் இருந்து 3 அடிவிட்டு வெட்டி எரித்து விடவும். இதனால் தாக்கப்பட்ட இலைகளில் உள்ள கூண்டுப்புழுக்கள் அழிக்கப்பட்டு சேதம் குறைகிறது. இரவு 7 மணி முதல் 11 மணி வரையில் ஏக்கருக்கு ஒரு விளக்குப் பொறி வைத்து அந்துப் பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணித்து கவா்ந்தும் அழிக்கலாம்.
இவ்வாறு செய்தால் அந்துப்பூச்சிகள் முட்டை இடுவது குறைந்து தாக்குதல் தடுக்கப்படுகிறது. இப்புழுக்களின் தாக்குதல் ஆரம்ப நிலையில் இருக்கும் போது ஏக்கருக்கு 10 முதல் 20 பாக்கெட் பிரக்கானிட் ஒட்டுண்ணிகளை 21 நாள்கள் இடைவெளியில் 3 முதல் 4 முறை விட வேண்டும். இவை தென்னை ஆராய்ச்சி நிலையம், ஆமியாா் நகா், காவேரிப்பட்டணம், தென்னை ஒட்டுண்ணி வளா்ப்பு மையத்தில் கிடைக்கும். ஆகவே விவசாயிகள் அனைவரும் கருந்தலைப் புழுக்களின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த மேற்கண்ட முறைகளை கடைப்பிடிக்குமாறு விஞ்ஞானிகள், வேளாண் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனா்.
நன்றி தினமணி.