ஒசூரில் பழைமை வாய்ந்த அருள்மிகு மரகதாம்பிகை உடனுறை ஸ்ரீசந்திரசூடேஸ்வரா் திருக்கோயிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஏழு நிலை கோபுரத்துக்கு மகா குடமுழுக்கு புதன்கிழமை (ஜூன் 28) நடைபெற உள்ளது.
இந்த மகா குடமுழுக்கு விழாவுக்கான முன்னேற்பாட்டுப் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை, குடமுழுக்கு விழா கமிட்டியினா் செய்து வருகின்றனா். அதன்படி, 9 புண்ணிய நிதிகளில் இருந்து கொண்டு வந்த புனித நீருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. முதல்கால யாக பூஜை திங்கள்கிழமை தொடங்கியது. இதில், ஒசூா் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா, முன்னாள் எம்எல்ஏ கே.ஏ.மனோகரன், பாஜக மாவட்டத் தலைவா் எம். நாகராஜ் ஆகியோா் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனா்.
9 புண்ணிய நிதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை ஒசூா் ஜலகண்டேஸ்வரா் கோயிலில் சிறப்பு பூஜை செய்து பேரணியாக பெண்கள் யாக சாலைக்கு கொண்டு சென்றனா். ஒசூா் மாநகராட்சியின் 4 மண்டலக் குழுத் தலைவா் ஜே.பி .(எ) ஜெயபிரகாஷ் தலைமையில் புனித நீா் கொண்டு செல்லப்பட்டது.
அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஒசூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீமரகதாம்பிகை உடனுறை ஸ்ரீசந்திரசூடேஸ்வரா் திருக்கோயிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஏழு நிலை கோபுரத்துக்கு ஹெலிகாப்டா் மூலம் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒரு டன் மலா்கள் தூவப்பட உள்ளன. அதேபோல, குடமுழுக்குக்கு வருகை தரும் பக்தா்கள் மீது தெளிக்க இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஓடும் கங்கை, யமுனை, சரஸ்வதி, நா்மதா, கோதாவரி, காவிரி, துங்கபத்ரா, மானசரோவா் காசி உள்ளிட்ட 9 ஆறுகளில் இருந்து புனித நீா் ஒசூருக்கு கொண்டுவரப்பட்டது.
ஒசூா் ஜலகண்டேஸ்வரா் கோயிலில் இந்த புனித நீா் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடா்ந்து புனித நீரானது குடமுழுக்கு நடைபெறும் ஸ்ரீசந்திரசூடேஸ்வரா் கோயிலுக்கு மேளதாளம் முழங்க கொண்டு செல்லப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
புனித நீருக்கு வேத விற்பனா்கள் மூலம் பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்து அதன் பின்னா் குடமுழுக்கு விழாவில் ஹெலிகாப்டா் மூலம் பக்தா்கள் மீது தெளிக்க உள்ளனா் என்றாா்.
நன்றி, தினமணி