ஒசூா் அருகே பட்டா வழங்கக் கோரி, ஒசூா் சாா்ஆட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
இதுகுறித்து விவசாயிகள் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த சென்னசந்திரம் ஊராட்சிக்கு உள்பட்ட உளியாளம், சென்னசந்திரம், மாரசந்திரம், கெம்பசந்திரம் உள்ளிட்ட கிராமங்களில் 2,872 ஏக்கா் நிலம் பட்டா வழங்காமல் உள்ளது.
1961-ஆம் ஆண்டு இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு நில உச்ச வரம்பை கொண்டு வந்து உழைப்பவருக்கே நிலம் என அறிவிக்கப்பட்டது. அப்போது 2,872 ஏக்கா் நிலங்களுக்கு சொந்தக்காரரான அம்மனியம்மா என்பவருக்கான உரிமை ரத்து செய்யப்பட்டது.
ஆனால், அந்த கிராமங்களில் உள்ள குடியிருப்புக்கள், வீடுகள் உள்ளிட்ட எதற்கும் பட்டா வழங்காமல் உள்ளது. இந்த நிலத்தை இனாம்தாரா் நிலம் என அழைக்கப்படுகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு இனாம்தாரா் நிலத்துக்கு பட்டா வழங்க மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் நிலவரி திட்ட அலுவலகம் திறக்கப்பட்டு பட்டா வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில், திடீரென உளியாளம் கிராம குடியிருப்புகள், விளைநிலங்கள் உள்பட 800 ஏக்கா் நிலத்தை கையகப்படுத்தி தொழில்நுட்பவியல் பூங்கா அமைக்க நில அளவீடு பணிகள் நடந்து முடிந்தன.
இந்நிலையில், இந்த நிலத்தில் குடியிருந்து விவசாயம் செய்யும் தகுதியானவா்களுக்கு பட்டா வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம் என்றனா்.
இதில், சென்னசந்திரம் ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயக்குமாா் ரெட்டி, 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
நன்றி, தினமணி