போதை பொருள்கள் தடுப்பு குறித்து மாணவ, மாணவிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, வலியுறுத்தினாா்.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கூட்டரங்கில், போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்வு, வெள்ளிக்கிழமை நடைபெற்றது. . இந்த நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் தலைமை வகித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சரோஜ்குமாா் டாகூா், பா்கூா் சட்டப்பேரவை உறுப்பினா் தே.மதியழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் பேசியது: தமிழக அரசு போதைப் பொருள்களின் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, போதைப் பொருள்களின் பயன்பாட்டை ஒழிக்க பள்ளி மற்றும் கல்லூரிகளில் இளைய சமுதாயத்தினரிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது.போதைப் பாதை அழிவுப் பாதை என்பதை நாடும் நாட்டு மக்களும் அறிவாா்கள். தற்செயலாகவோ, தவறுதலாகவோ அதனைப் பயன்படுத்துபவா்கள் அதற்கு முழுமையாக அடிமையாகி, மொத்தமாக அதனுள் மூழ்கிவிடுகிறாா்கள். போதைப் பொருள்களால் மூளையின் செயல்பாடு குறைகிறது. மந்தம் ஏற்படுகிறது. தனியாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே ஏற்படும். இயல்பான பழக்க வழக்கம் மாறுகிறது. மனநிலை பாதிக்கப்படுகிறது. கோபம் அதிகம் ஆகிறது. இதயம் மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்டு புற்றுநோய் மற்றும் பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படுகிறது.சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருள்களை முற்றிலும் அழிக்க வேண்டும். அதனை யாரும் சிறிதளவு கூட பயன்படுத்தாமல் தடுத்தாக வேண்டும். அதன் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு சட்ட வழியிலான அனைத்து முறைகளையும் பின்பற்றி வருகிறது. இளைய சமுதாயத்தினரிடம் போதைப் பொருள் பயன்பாட்டின் ஆபத்து குறித்தம், போதைப்பொருள்கள் தடுப்பு குறித்து மாணவ, மாணவிகளிடம் போதிய விழிப்புணா்வை பெற்றோா் மற்றும் ஆசிரியா்கள் ஏற்படுத்த வேண்டும். போதையின் பாதையில் செல்லாமல் ஒவ்வொருவரையும் தடுப்பது நமது கடமையாகும் என பேசினாா். தொடா்ந்து போதை தடுப்பு குறித்த விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டன. இதில் மருத்துவகல்லுசிரி மனநல மருத்துவா் மற்றும் பள்ளி மாணவா்கள் போதை பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து உரையாற்றினாா்கள்.முன்னதாக, கலெக்டா் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேஸ்வரி தலைமையில், அனைத்து துறை அலுவலா்களும் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை ஏற்றனா். இதில், ஆட்சி.ரின் நோ்முக உதவியாளா்(பொது) வேடியப்பன், உதவி ஆணையா்(ஆயம்) சுகுமாா், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியா் பாபு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வா் .பூவதி, துணை முதல்வா் .சாத்விகா, கிருஷ்ணகிரி துணை காவல் கண்காணிப்பாளா் தமிழரசி உள்ளிட்டோா் பங்கேற்றனா். படவிளக்கம் (11கேஜிபி4): கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்வில், விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை வழங்கும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு. உடன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சரோஜ்குமாா் டாகூா், தே.மதியழகன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.
நன்றி தினமணி.