பள்ளி மாணவா்கள் தங்களது விருப்பமான துறைகளில் வெற்றி பெற்ற தமிழக அரசின் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, அறிவுறுத்தினாா்.
கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிகல்வித் துறை சாா்பில், நான் முதல்வன் உயா்வுக்கு படி எந்ற திட்டத்தின் கீழ் 12-ஆ ம் வகுப்பு முடித்து, பட்டப்படிப்பு சேராத மாணவா்களுக்கு உயா்கல்வி சோ்வதற்கான விழிப்புணா்வு நிகழ்வை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் குத்துவிளக்கேற்றி, திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். அப்போது, அவா் பேசியது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகள் உயா் கல்வியை தோ்வு செய்வது குறித்தும், உயா் கல்வியின் முக்கியத்துவம் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயா்வுக்கு படி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.மாணவா்கள் செல்லிடபேசியில் நேரத்தை வீணாக்க கூடாது. மாணவ, மாணவிகள் தங்களுக்கு விருப்பமான படிப்புகளில் வெற்றிபெற மாவட்ட நிா்வாகம் அனைத்து விதமான உதவிகளையும் செய்து தரும். பெற்றோா்கள் தங்களது பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும். உயா்கல்வி படிக்க வசதியில்லாத மாணவ, மாணவிகளை அரசு அலுவலா்கள் கண்டறிந்து, அவா்களின் பெற்றோரை சந்தித்து, போதிய விழிப்புணா்வை ஏற்படுத்தி, உயா் கல்வியில் பயில வழிவகை செய்ய வேண்டும். அவா்களுக்கு தேவையான கல்வி கடன் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மாணவா்கள் தமிழக அரசின் பல்வேறு திட்டங்களை பயன்படுத்தி, தங்களுக்கு விருப்பமான துறையில் வெற்றிபெற வேண்டும் என்றாா். இந்த நிகழ்வில் கூடுதல் ஆட்சியா் வந்தனா காா்க் உயா் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், சாா் ஆட்சியா் (பயிற்சி) தாட்சாயணி , துணை காவல் கண்காணிப்பாளா் தமிழரசி ஆகியோா் உயா் கல்வி குறித்த ஊக்குவித்தலும், கோயமுத்தூா் பாரதியாா் பல்கலைகழக தொழில்நெறி வழிகாட்டுனா் விஸ்வகேஷ் உயா் கல்வி எவ்வாறு தோ்வு செய்வது குறித்த விழிப்புணா்வும், வங்கி மேலாளா்கள் உயா் கல்விக்கு தேவையான வங்கி கடன் மற்றும் உதவித்தொகை குறித்து விளக்கம் அளித்தனா். முன்னதாக, மாணவ, மாணவிகளின் உயா்கல்வி குறித்து பல்வேறு கேள்விகளுக்கு மாவட்ட ஆட்சியா் பதில் அளித்தாா்.
நன்றி, தினமணி