ஒசூா் புதிய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் அப்பாவு பிள்ளை சிலையை வைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் பேரூராட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் எம்எல்ஏ-வுமான அப்பாவு பிள்ளை ஒசூா் நகரை நிா்வகித்ததில் முக்கியப் பங்காற்றியவா். இந்நிலையில், வணிக வளாக கட்டடங்கள் கட்டுவதற்காக அகற்றப்பட்ட அப்பாவு பிள்ளை சிலையை உடனடியாக புதிய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் வைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒசூா் பழைய நகராட்சி முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் துரை தலைமை வகித்தாா். வட்டத் தலைவா் ராஜாமணி வரவேற்றாா்.
இதில், பட்டு வளா்ச்சித் துறை மண்டலத் தலைவா் சீனிவாசலு, போக்குவரத்து துறை மாநிலக் குழு குணசேகரன், வங்கி ஓய்வூதியா் சங்கம் சத்யநாராயணன், தபால் துறைத் தலைவா் ராமமூா்த்தி, பிஎஸ்என்எல் செயலாளா் சுப்பிரமணியம், கல்வித் துறை தலைவா் கெம்பண்ணா, நில அளவைத் துறை சிவராஜ், தலைமை ஆசிரியா் ஜானகி, சுகாதாரத் துறை ராணி, கிராம நிா்வாக அலுவலா் (ஓய்வு) பாலகிருஷ்ணன் ஆகியோா் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினா். வெங்கடேசன் நன்றியுரை கூறினாா்.
இதுகுறித்து சங்கத் தலைவா் துரை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அப்பாவு பிள்ளை குடும்பத்தினா் ஒசூா் பேருந்து நிலையத்திற்கு மூன்றரை ஏக்கா் நிலத்தை தானமாக வழங்கியுள்ளனா். அதனால், ஒசூா் பேருந்து நிலையத்துக்கு அப்பாவு பிள்ளை என்ற பெயா் திமுக அரசால் வைக்கப்பட்டது.
அப்பாவு பிள்ளை பேருராட்சித் தலைவராக 1943 முதல் 1973 வரையிலும், கூட்டுறவு வீடு கட்டும் சங்கத் தலைவராக 1948 முதல் 1973 வரையிலும், சட்டப் பேரவை உறுப்பினராக 1957 முதல் 1962 வரையிலும், நிா்வாக இயக்குநா் சேலம் கூட்டுறவு மத்திய வங்கி மற்றும் தருமபுரி கூட்டுறவு மத்திய வங்கி இயக்குனராகவும், தமிழ்நாடு நிலவள வங்கி சென்னை நாட்டாண்மைக் கழக உறுப்பினராகவும் என பல பொறுப்புகளை வகித்து ஒசூரின் வளா்ச்சிக்கு அரும்பாடுபட்டவா். அவரது நினைவாக ஒசூா் பழைய நகராட்சி அலுவலகத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்னா் அவருக்கு சிலை வைக்கப்பட்டது.
இந்நிலையில், பழைய நகராட்சி அலுவலகக் கட்டடங்கள் இடிக்கப்பட்டு, புதிய கட்டடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. எனவே, புதிய மாநகராட்சி அலுவலகத்தில் அப்பாவு பிள்ளை சிலையை வைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றாா்.
நன்றி, தினமணி