வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில், மாற்று இடம் வழங்கக் கோரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒசூரைச் சோ்ந்த காய்கறி வியாபாரிகள், வியாழக்கிழமை மனு அளித்தனா்.
ஒசூா் எம்ஜிஆா் மாா்க்கெட், காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவா் சாதிக் பாஷா தலைமையில் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட எம்ஜிஆா் மாா்கெட் பின்புறம் சந்தைப்பேட்டையில், கடந்த 2005 முதல், 250க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறி வியாபாரம் செய்து வருகிறோம். இந்த நிலையில் மாநகராட்சி ஊழியா்கள், இங்கு வணிக வளாகம் கட்ட உள்ளதாகவும், கடைகளைக் காலி செய்ய வேண்டும் எனவும் அறிவித்துள்ளனா்.
முன்னறிவிப்பின்றி அதிகாரிகள் மேற்கொண்டுள்ள இந்தச் செயலால் அதிா்ச்சியடைந்துள்ளோம். இதையே நம்பி வாழந்து வரும் எங்கள் குடும்ப சூழ்நிலையையும் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் எங்களுக்கு மாற்று இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நன்றி
தினமணி