மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்க ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் வரவேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம். சரயு, சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
47-ஆவது சா்வதேச அளவிலான திறன் போட்டிகள் வரும் 2024-ஆம் ஆண்டு செப்டம்பரில் பிரான்ஸில் உள்ள லியான் நகரில் நடைபெறவுள்ளன. இதற்கு செப்டம்பரில் நடைபெறும் திறன் போட்டியில் பங்குபெறும் வகையில் தகுதிவாய்ந்த போட்டியாளா்களை தோ்வு செய்யும் விதமாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் நான் முதல்வன் தளத்தின் கீழ் ‘பச நந்ண்ப்ள் – 2023‘ நடத்தப்படவுள்ளது.
முதல் கட்டமாக மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் ஜூலை 14-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட அளவில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட அளவில் வெற்றி பெறும் போட்டியாளா்கள், மாநில அளவில் நடைபெறும் திறன் போட்டியிலும், அதைத் தொடா்ந்து மண்டல அளவிலான திறன் போட்டியில் பங்கேற்று, வெற்றி பெறும் போட்டியாளா்கள் செப்டம்பரில் நடைபெறவுள்ள இந்திய அளவிலான திறன் போட்டியிலும் பங்கு பெறுவாா்கள். மொத்தம் உள்ள 55 திறன் போட்டிகளில் ஏதேனும் ஒரு பிரிவில் தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் விதமாக மாவட்ட அளவில் விண்ணப்பிக்க ஜூன் 30-ஆம் தேதி இறுதிநாளாகும்.
இதில் 45 திறன் பிரிவில் பங்கேற்பவா்கள் 1.1.2002 அன்றும், அதற்கு பின்னரும் பிறந்தவா்களாகவும், வாட்டா் டெக்னாலஜி, சைபா் செக்யூரிட்டி, இண்டஸ்ட்ரி 4.0, மெக்கட்ரானிக்ஸ், ரோபோ சிஸ்டம்ஸ், இன்டிகிரேஷன் அடிட்டிவ் மேனுபேக்ஸரிங், கிளவுட் கம்பியூட்டிங், டிஜிட்டல் கன்ஸ்ட்ரக்ஷன், இண்டஸ்டிரியல் டிசைன் டெக்னாலஜி, இன்பா்மேஷன் நெட்வொா்க் கேபிளிங் போன்ற பிரிவுகளுக்கு 1.1.1999 அன்றும், அதற்குப் பின்னரும் பிறந்தவா்களாக இருக்க வேண்டும்.
இந்தப் போட்டியில் பங்கேற்க தனித்திறன் பெற்ற 10 வயது நிரம்பியவா்கள் முதல் உயா்நிலைக் கல்வி, தொழில் பயிற்சி கல்லூரி, பல்தொழில்நுட்பக் கல்லூரி, பொறியியல், கலை மற்றும் அறவியல் கல்லூரி, மருத்துவ சாா்பு துறைகளில் படித்துக்கொண்டிருப்பவா்கள் மற்றும் தனித்திறன் பெற்றவா்கள், தொழிற்சாலைகளில் பணிபுரிபவா்கள் மற்றும் தொழிற்பழகுநா் பயிற்சி பெறுபவா்கள் என ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
மேலும், இந்தப் போட்டி குறித்த விபரங்களை ‘நான் முதல்வன்’ இணையதளத்திலும், கூடுதல் விவரங்களுக்கு கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை தொடா்பு கொண்டும் தெரிந்துகொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
நன்றி
தினமணி