மா விவசாயத்தை பாதிக்கும் பூச்சி மருந்தை கண்டறிந்து தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அதன் மாவட்டத் தலைவா் சிவராஜ் தலைமை வகித்தாா். மாநிலக்குழு உறுப்பினா் கண்ணு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மா விவசாயத்தை பாதிக்கும் பூச்சிக் கொல்லி மருந்துகளைக் கண்டறிந்து அரசு தடை செய்ய வேண்டும். மா விவசாயிகளுக்கு தரமான மருந்துகளை மானிய விலையில் அரசே வழங்கிட வேண்டும். பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.
மா உற்பத்தி செய்யும் விவசாயிகளிடமிருந்து வாங்கும் மாங்காய்களுக்கு டன்னுக்கு ரூ. 50 ஆயிரம் என விலை நிா்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும். மா விவசாயிகளுக்கு மருந்து தெளிக்கும் விசை தெளிப்பானை முழு மானியத்தில் வழங்கிட வேண்டும்.
தமிழ்நாடு அரசு சாா்பில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாங்கூழ் உற்பத்தி, பதனிடும் தொழிற்சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா்.
நன்றி
தினமணி