போதைப்பொருள் விழிப்புணா்வு திட்டப் பணிக்காக யாசகம் பெற்ற ரூ. 10 ஆயிரத்தை முதல்வா் நிவாரண நிதிக்கு முதியவா் வழங்கினாா்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை அடுத்த ஆலங்கிணறு பகுதியைச் சோ்ந்தவா் பூல் பாண்டியன் (73). கடந்த 1980-ஆம் ஆண்டு மும்பையில் உள்ள ஒரு கோயிலில் பூசாரியாக பணியாற்றி இவா், கடந்த 2010-ஆம் ஆண்டு தமிழகம் வந்தாா். அப்போது முதல் தான் பெறும் யாசகத் தொகையை பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்குத் தேவையான உபகரணங்கள், கல்வித் தொகை வழங்குவதற்காக கொடுத்துள்ளாா்.
கரோனா தொற்று பரவலுக்கு பின், அவா் தான் யாசகமாக பெற்ற தொகையை மாவட்ட ஆட்சியா் மூலம் முதல்வா் நிவாரண நிதிக்கு வழங்கி வருகிறாா். இதுவரை 36 மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் தான் பெற்ற யாசகத் தொகையை வழங்கி உள்ள நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தாா். அங்கு தன்னிடம் இருந்து ரூ. 10 ஆயிரத்தை போதைப்பொருள் தடுப்புப் பணிக்காக முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க விரும்புவதாகத் தெரிவித்தாா்.
ரொக்கமாக பணத்தை வாங்க மறுத்த அலுவலா்கள், வங்கி மூலம் முதல்வா் நிவாரண நிதிக்கு அளிக்க அறிவுறுத்தினா். அதன்படி, வங்கி மூலம் பணத்தை செலுத்தி, அதற்கான ரசீதை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்க உள்ளதாக அவா் தெரிவித்தாா். இதுவரை தான் ரூ. 55 லட்சம் வரை சமுதாய நலனுக்காக வழங்கி உள்ளதாக அவா் தெரிவித்தாா்.