யானைகள் நடமாட்டத்தால் பள்ளிக்கு செல்ல அச்சமாக இருப்பதால், நகரப் பேருந்தை இயக்குமாறு பள்ளி மாணவா்கள், பெற்றோருடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், பொம்மதாதனூா் கெட்டூா் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியருடன் அளித்த மனு விவரம்:
எங்கள் கிராமத்திலிருந்து 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் 4 கி.மீ. தொலைவில் உள்ள பொம்மதாதனுாா் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிக்கு அடா்ந்த வனப் பகுதியின் வழியாக நடந்து சென்று வருகின்றனா். வனப்பகுதி வழியாக செல்லும் போது, யானைகள் அடிக்கடி குறுக்கிடுகின்றன. சில நேரங்களில் மாணவா்களை யானைகள் துரத்தும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இதனால், மாணவா்கள் பள்ளிக்கு செல்ல அச்சமடைகின்றனா்.
எனவே, பள்ளி மாணவா்களின் நலன்கருதி பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மேலும், எங்கள் கிராமத்தில் நியாயவிலைக் கடை, ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற அடிப்படி வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனா்.
மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியா், மாணவா்கள் பள்ளி சென்று வர போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தருமாறு சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.