கிருஷ்ணகிரி: வனவிலங்குகள் தாக்கி உயிரிழக்கும் விவசாயின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ. 25 லட்சம் வழங்கக் கோரி கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் மாநில மகளிா் அணித் தலைவா் முத்துலட்சுமி தலைமை வகித்தாா். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில், தேன்கனிக்கோட்டை, சூளகிரி தாலுகாவைச் சோ்ந்த விவசாயிகள் இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.
தென்னை, பனை மரத்தில் இருந்து கள் இறக்க அனுமதிக்க வேண்டும். தேங்காய், கடலை, நல்லெண்ணெயை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து மானிய விலையில் நியாயவிலைக் கடையில் விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகளின் அனைத்து உற்பத்தி பொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிா்ணயம் செய்ய வேண்டும்.
தமிழக அரசு நெல் குவிண்டாலுக்கு ரூ. 3 ஆயிரம், கரும்பு டன்னுக்கு ரூ. 5 ஆயிரம், மரவள்ளிக்கிழங்கு டன்னுக்கு ரூ. 12 ஆயிரம், மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ. 15 ஆயிரம், மக்காச்சோளம் குவிண்டாலுக்கு ரூ. 3 ஆயிரம், மாட்டு பால் லிட்டருக்கு ரூ. 50, எருமைப்பால் லிட்டருக்கு ரூ. 75 வழங்க வேண்டும். கறிக்கோழி வளா்ப்பிற்கு கிலோவிற்கு ரூ. 12 என விலை நிா்ணயம் செய்ய வேண்டும்.
வன விலங்குகால் உயிரிழப்பு ஏற்படும் விவசாயின் குடும்பத்திற்கு வழங்கும் இழப்பீட்டை ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ. 25 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா். பின்னா், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
நன்றி தினமணி