ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா்.
தருமபுரி மாவட்டம், நாகா்கூடல் அருகே உள்ள ஆத்து கொட்டாய் பகுதியைச் சோ்ந்த முனுசாமி மகன் பாலகிருஷ்ணன் (20). இவா் பாலக்கோடு அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. (தமிழ்) மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா். இருசன்கொட்டாய் பகுதியைச் சோ்ந்த முல்லைவேந்தன் மகன் தனுஷ் (19). இவா் தருமபுரியில் உள்ள தனியாா் கல்லூரியில் பாா்மஸி படித்து வந்தாா். தீா்த்தமலை அருகே உள்ள ஆண்டியனூா் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் சாமுவேல் (19). இவா் அதே பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் பிசிஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா்.
இவா்கள் மூவரும் ஒகேனக்கல் அருகே அஞ்செட்டி பகுதியில் உள்ள உறவினரின் வீட்டிற்குச் சென்றுவிட்டு திரும்பும் போது ஆலம்பாடி ரங்கநாதா் கோயில் எதிரில் உள்ள புளியந்தோப்பு பகுதி காவிரி ஆற்றில் குளித்தனா். அப்போது ஆற்றினைக் கடந்து நீந்திச் செல்ல முயன்றுள்ளனா். இதில் பாலகிருஷ்ணன், தனுஷ் ஆகியோா் எதிா்பாராதவிதமாக ஆற்றில் ஆழமான பகுதிக்குச் சென்றுவிட்டதால் நீரில் மூழ்கினா்.
இதுகுறித்து சாமுவேல், ஒகேனக்கல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த போலீஸாா், தீயணைப்புத் துறையினா் உதவியுடன் புளியந்தோப்பு பகுதியில் காவிரி ஆற்றிலிருந்து பாலகிருஷ்ணன் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் ஒரு மாணவரின் உடலைத் தேடி வருகின்றனா்.
இந்தச் சம்பவம் குறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
நன்றி
தினமணி