கொப்பரைத் தேங்காய் ஏலத்தில் வெளி மாவட்ட, மாநில வியாபாரிகளை பங்கேற்க செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கே.எம். சரயு தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியா் கே.எம். சரயு தலைமையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
ரசாயனக் கழிவுகள் கலந்த தென்பெண்ணை ஆற்றுநீரைப் பயன்படுத்துவதால் விளைநிலங்கள் பாதிக்கப்படுகின்றன. இதுகுறித்து பலமுறை புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ரசாயனக் கழிவுகள் கலப்பது குறித்து, ஆற்றுநீரைப் பரிசோதனைக்கு உள்படுத்திய முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை.
போதிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தாலும் சான்றிதழ் வழங்குதலில் காலதாமதம் ஏற்படுகிறது. குறிப்பிட்ட சில கணினி மையங்களில் விண்ணப்பித்தால் செய்தால் மட்டுமே, கிராம நிா்வாக அலுவலா்கள் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கப்படுகிறது. அத்தகைய நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டும்.
மான், மயில், குரங்குகளால் ஏற்படும் பயிா்சேதங்களுக்கு இழப்பீடு வழங்க அரசுப் பரிந்துரை செய்யக் கோரி பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சூளகிரி பகுதியில் பெய்த மழையால் காலிபிளவா், முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகள் அழுகியதால் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 45 ஆயிரம் வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு இழப்பீடு வழங்க வேண்டும். கிருஷ்ணகிரி – தருமபுரி வழித்தடத்தில் இயக்கப்படும் தனியாா் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஏரி, குளம், குட்டைகள் உள்ளிட்ட நீா்நிலைகளை கணக்கெடுப்பு நடத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும். நீா்நிலைகளில் சாலைகள் அமைப்பதைத் தடுக்க வேண்டும். தரமில்லாத விதைகள் வழங்கப்படுவதால் மகசூல் பாதிக்கப்படுகிறது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் பேசியதாவது: தென்பெண்ணை ஆற்றில் ரசாயனக் கழிவுநீா் கலப்பதைத் தடுப்பது குறித்து தலைமைச் செயலாளா் மூலம் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. கொப்பரைத் தேங்காய் ஏலத்தில் வெளி மாநில, மாவட்ட வியாபாரிகளைப் பங்கேற்க செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியாா் பேருந்துகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும். நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றிட நடவடிக்கை எடுக்கப்படும். தரமற்ற விதைகள் குறித்து தொடா்புடைய அலுவலா்கள் ஆய்வு செய்வாா்கள் என்றாா்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேஸ்வரி, வேளாண்மை இணை இயக்குநா் முகமதுஅஸ்லாம், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் பூபதி, கூட்டுறவு பதிவு இணை இயக்குநா் ஏகாம்பரம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வேளாண்மை(பொ) சீனிவாசன், கால்நடைப் பராமரிப்புத் துறை துணை இயக்குநா் மரியசுந்தரம், விவசாயிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நன்றி
தினமணி