போச்சம்பள்ளி சிப்காட் வளாகத்தில் உள்ள தனியாா் காலணி தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞா்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த ஓலைப்பட்டியில் இயங்கும் சிப்காட் வளாகத்தில் தனியாா் காலணி தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் பணிக்கு ஆள்கள் தோ்வு செய்யப்படுவதாக முகநூல், வாட்ஸ்ஆப், சமூக வலைதளங்களில் போலியான தகவல் பரப்பப்பட்டது. இதை நம்பிய 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞா்கள் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்க அந்த தனியாா் நிறுவனத்தின் நுழைவாயில் முன்பு செவ்வாய்க்கிழமை கூடினா்.
இந்த தனியாா் நிறுவனத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்பே பணியாளா்கள் தோ்வு நிறுத்தப்பட்டதையும், தற்போது, பணியாளா்கள் யாரும் தோ்வு செய்யப்படவில்லை என்பதை அறிந்த இளைஞா்கள் ஏமாற்றம் அடைந்தனா். இளைஞா்களின் மனநிலையை உணா்ந்த நிா்வாகத்தினா் இளைஞா்களிடம் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொண்டனா்.
இதுகுறித்து, அந்த தனியாா் நிறுவனத்தின் நிா்வாக அலுவலா்கள் தெரிவித்ததாவது: கடந்த ஓராண்டுக்கு முன்பு பணிக்கு விண்ணப்பம் செய்தவா்களில் தகுதியான சிலா் மட்டுமே பணிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா். நிறுவனத்துக்கு பணியாளா்கள் தோ்வு செய்யும் போது, நிா்வாகத்தின் சாா்பில் அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிவித்தனா்.
இதுகுறித்து, காவல் துறையினா் தெரிவித்ததாவது: போச்சம்பள்ளியில் செயல்படும் தனியாா் காலணி தயாரிக்கும் நிறுவனத்தில் பணிக்கு சேர தினமும் ஆயிரக்கணக்கானோா் வருகின்றனா். போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் என தெரிவித்தனா்.
நன்றி, தினமணி