அரூா் பேருந்து நிலையத்தின் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக பேருந்துகள் நிறுத்துமிடம் வியாழக்கிழமை மாற்றப்பட்டது.
அரூா் பேருந்து நிலைய வளாகத்தில் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 3.62 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணி நடைபெறுகிறது. இதனால் பேருந்து நிலைய வளாகத்தில், பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் வாடகைக்கு விடப்பட்டிருந்த அனைத்து கடைகளும் காலி செய்யப்பட்டு, பழைய கட்டடங்கள் அனைத்தும் பொக்லையன் எந்திரம் மூலம் இடிக்கப்படுகின்றன. இதையடுத்து, அரூரில் தற்காலிகமாக டி.என்.டி திரையரங்கம் எதிரே, அரூா்-தருமபுரி பிரதான சாலையில் பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன.
பேருந்து நிறுத்துமிடத்தில் மாற்றம் தேவை:
அரூா் நகா் பகுதிக்கு வந்து செல்லும் நகா் மற்றும் புற நகா் பேருந்துகள் அனைத்தும் பேருந்து நிலையம் அருகில் வந்து மீண்டும் அரூா்-தருமபுரி பிரதான சாலையில் நிறுத்தப்படுகின்றன. இதனால் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிா்க்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது திருப்பத்தூா், வேலூா், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட தொலைதூர பகுதிகளுக்கு செல்லும் புற நகா் பேருந்துகளை அரூா் கச்சேரிமேடு சாலை சந்திப்பு, அரசு கால்நடை மருத்துவமனை வளாகம், அரூா் அரசு மருத்துவமனை வளாகம் அருகில் நிறுத்த வேண்டும். அரூா் வட்டாரப் பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளை பேருந்து நிலையம் அருகேயுள்ள டி.என்.டி திரையரங்கு பகுதியில் நிறுத்த வேண்டும். பேருந்துகளை தனித்தனியாக பிரித்து நிறுத்துவதினால் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிா்க்கலாம். எனவே, அரூரில் தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பது குறித்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
நன்றி, தினமணி